
குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும்போது அடிக்கல் நாட்டி, இந்திய பிரதமர் ஆன பிறகு திறந்துவைத்த பாலம் ஒன்று திறப்பு விழா கண்ட மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்துவிட்டது என்று ஒரு படத்துடன் கூடிய தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived link 1 I Archived link 2
உடைந்த சாலை பாலம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “முதலமைச்சர் நரேந்திர மோதியால் அடிக்கல் நடப்பட்டு, பிரதமர் நரேந்திர மோதியால் ரிப்பன் வெட்டப்பட்டு சில மாதங்களில் நட்டுக்குட்ட ஜாம்நகர் ஜூனாகாத் பாலம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் ஜூனாகாத் பாலம் என்று குறிப்பிட்டுள்ளனர். இது எப்போது திறக்கப்பட்டது, எப்போது உடைந்தது என்று எந்த தகவலும் இல்லை. இந்த பதிவை, காங்கிரஸ் முகநூல் பேரவை என்ற ஃபேஸ்புக் பக்கம் ஜூன் 20, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குஜராத் மாநிலம் ஜாம்நகர் – ஜூனாகாத் இடையேயான சாலையில் உள்ள பாலம் ஏதாவது உடைந்தது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, ஜூன் 19ம் தேதி இந்த பாலம் உடைந்தது தொடர்பாக பல செய்திகள் வெளியாகி இருந்தன.
அவற்றை ஆய்வு செய்தோம்…
19ம் தேதி பகல் 2 மணி அளவில் ஜாம்நகர் – ஜூனாகாத் இடையேயான நெடுஞ்சாலையில் கோபேஷ்வர் மகாதேவ் கோவிலுக்கு அருகே உள்ள ஒரு சிறிய ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது. நல்லவேளையாக அப்போது வாகனம் எதுவும் அந்த பாலத்தில் செல்லவில்லை. இதனால், மிகப்பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. உடனே விரைந்துவந்த போலீசார் வாகன போக்குவரத்தைத் திரும்பிவிட்டுள்ளனர் என்று இருந்தது.
மேலும், அந்த செய்தியில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் என்றோ, நரேந்திர மோடி திறந்து வைத்த பாலம் என்றோ குறிப்பிடவில்லை. ஜாம்நகர் – ஜூனாகாத் இடையே உள்ள சாலை மாநில நெடுஞ்சாலைதான். பாலமும் மிகச் சிறியதுதான். சில நூறு மீட்டர் தான் இருக்கும். இதை பிரதமர் வந்து திறந்து வைக்க வேண்டிய தேவையும் இல்லை.
குஜராத்தில் இருந்து வெளியான எல்லா செய்திகளிலும், இந்த பாலம் இடிந்ததைப் பற்றி சிறிய அளவில் குறிப்பிட்டிருந்தனர். மோடி அடிக்கல் நாட்டியது என்றோ, அவர் திறந்து வைத்தது என்றோ எந்த ஒரு தகவலும் இல்லை.
மேலும், அந்த செய்திகளில் வெளியான படத்தைப் பார்க்கும்போது பாலம் புதிதாக கட்டப்பட்டது போன்று இல்லை. இந்த பாலம் கான்கிரீட்டால் கட்டப்பட்டது போலவும் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்து, கல் வைத்து கட்டப்பட்ட பாலம் போல தெரிந்தது.

படம்: deshgujarat.com
மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் கணக்குப் படி, பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இந்த பாலம் திறக்கப்பட்டிருக்க வேண்டும். மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதற்கு முன்பு குஜராத்தில் பாலம் எதையாவது பிரதமர் மோடி திறந்து வைத்தாரா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

2017ம் ஆண்டு நர்மதா நதியில் பாலம் ஒன்றைத் திறந்தது தொடர்பாக எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அதன்பிறகு, குஜராத்தில் எந்த ஒரு பாலத்தையும் அவர் திறந்ததாக செய்தி இல்லை. 2018ல் சூரத் நகரில் நான்கு வழி கேபில் டிசைன் பாலம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதைக் கூட குஜராத் முதல்வர் விஜய் ரூபானிதான் திறந்துவைத்துள்ளார். அப்படி இருக்கும்போது இந்த சிறிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்று சொல்வது நம்பும்படி இல்லை.
நம்முடைய ஆய்வில், இந்தியா டுடே வெளியிட்ட செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், இதே போன்று ஒரு தகவலை மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது தெரிந்தது. அது உண்மையா என்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் அந்தப் பகுதிக்கான மாநில நெடுஞ்சாலைகள் துறையின் செயல் பொறியாளர் ஜெ.வி.ஜோஷி என்பவரிடம் பேசியுள்ளனர். அவர், இந்த பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது யாரும் கல் வைத்து பாலங்கள் கட்டுவது இல்லை. இது எல்லாம் 50 ஆண்டுக்கு முன்பு இருந்த கட்டுமான முறைதான். பாலத்தைப் பார்த்தாலே அது நன்கு தெரியும்” என்று கூறியுள்ளார். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய ஆய்வில்,
கடந்த மூன்று – நான்கு மாதங்களில் குஜராத்தில் பிரதமர் மோடி எந்த பாலத்தையும் திறந்து வைக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலத்தைக் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவில்லை. அவர் திறந்து வைக்கவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த பாலம் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று சாலை பொறியாளர் உறுதி செய்த தகவல் கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“மூன்றே மாதத்தில் உடைந்த மோடி கட்டிய பாலம்…” – ஃபேஸ்புக் பதிவு கிளப்பிய பரபரப்பு!
Fact Check By: Praveen KumarResult: False
