பிரதமர் அலுவலகத்திற்குள் நுழையும் முன்பாக ரிஷி சுனக் விளக்கேற்றி வழிபட்டாரா?

அரசியல் | Politics சமயம் சர்வதேசம் | International

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்கச் சென்ற போது அலுவலகத்தில் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்ட ரிஷி சுனக், வீடு/அலுவலக வாசல் முன்பு விளக்கேற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடி பிரதமர் ஆனவுடன் பார்லிமென்ட் முன்பு கீழ் விழுந்து வணங்கினார். ரிஷி சுனக் அலுவலகம் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Ravi Vino என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 27ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இதே போன்று, “ரிஷி சுனக் தனது அலுவலகம் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டார்” என்று C Chitra Devi Bjp என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். இவர்களைப் போல பலரும் இந்த வீடியோ மற்றும் பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பொறுப்பேற்க இருந்த நிலையில் நாடாளுமன்றத்திற்குச் சென்ற மோடி, நாடாளுமன்ற படிகளைத் தொட்டு வணங்கி உள்ளே சென்றார். அது போன்று இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்ட ரிஷி சுனக் பொறுப்பேற்க செல்வதற்கு முன்பு அலுவலக வாசலில் விளக்கேற்றி வணங்கினார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோவை சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த நினைவு இருந்ததால், இது பற்றி ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சிகளைப் புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டு இங்கிலாந்தின் நிதியமைச்சராக ரிஷி சுனக் இருந்த போது, தன்னுடைய அலுவலக வாசலில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடினார் என்று வீடியோக்கள் மற்றும் செய்திகள் நமக்குக் கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோடு 2020ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி என்டிடிவி வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது. 

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive 1 I bbc.com I Archive 2

அதில், இங்கிலாந்தின் நிதியமைச்சர் (UK Chancellor of the Exchequer) ரிஷி சுனக் தன்னுடைய அதிகாரப்பூர்வமான இல்லமான டவுனிங் தெருவில் 11ம் எண் வீட்டுக்கு வெளியே விளக்கு ஏற்றினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. டவுனிஸ் தெருவில் 10ம் நம்பர் வீடுதான் இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு மற்றும் அலுவலகம் ஆகும். தொடர்ந்து தேடிய போது ரிஷி சுனக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவும் கிடைத்தது. 

Archive

ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, எண் 10, டவுனிங் தெருவில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்குள் நுழையும் போது வழிபாடு நடத்தினாரா என்று அறிய அது தொடர்பான வீடியோவைத் தேடினோம். The Telegraph என்ற இங்கிலாந்து ஊடகம் ஒன்றின் யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோ கிடைத்தது. 

டவுனிங் தெருவில் உள்ள அலுவலகத்திற்கு வரும் ரிஷி சுனக், பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். அதன் பிறகு அந்த அலுவலகத்திற்குள் அவர் நுழையச் செல்கிறார். அவர் தன்னுடைய உரையை முடித்துவிட்டு அலுவலகத்திற்குள் செல்ல முற்படும் காட்சியை வீடியோவின் 6.10வது நிமிடத்தில் இருந்து காணலாம். பத்திரிகையாளர்கள் வீடியோ, புகைப்படம் எடுத்ததும் கதவு திறக்கப்படுகிறது. அங்கு அவருக்கு ஊழியர்கள் வரவேற்பு அளித்தனர் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் எங்கும் அவர் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவில்லை. 

இதன் மூலம் 2020 தீபாவளி வீடியோவை எடுத்துவந்து, பிரதமராக பொறுப்பேற்க அலுவலகம் செல்லும் ரிஷி சுனக் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

2020ம் ஆண்டு தீபாவளி திருவிழாவின் போது ரிஷி சுனக் தீபம் ஏற்றிய வீடியோவை, பிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பு விளக்கேற்றி வழிபாடு செய்தார் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பிரதமர் அலுவலகத்திற்குள் நுழையும் முன்பாக ரிஷி சுனக் விளக்கேற்றி வழிபட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False