திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மறைவு: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி

அரசியல் சமூக வலைதளம்

‘’ஓசி பிரியாணி வீரமணி அவர்கள் அகால மரணம் அடைந்தார்,’’ என்று கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை அறிய தீர்மானித்தோம். அதில் தெரியவந்த விவரம் பின்வருமாறு:

வதந்தியின் விவரம்:

Archive Link

இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், ‘’கண்ணீர் அஞ்சலி , தோற்றம்: 2/12/1933, மறைவு: 29/03/2019, சில தினங்களுக்கு முன்பு இந்து மத கடவுளான கிருஷ்ணனை இழிவுபடுத்தி பேசிய ஓசி பிரியாணி  வீரமணி அவர்கள் அகால மரணமடைந்தார் என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மை பற்றி யோசிக்காமல், பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தி.க. எனப்படும் திராவிடர் கழகத்தின் தலைவராக உள்ளவர் கி. வீரமணி. அடிப்படையில் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், பிராமண எதிர்ப்பையே வாழ்நாள் அடையாளமாகக் கொண்டிருந்த பெரியாரின் ஆஸ்தான சீடர் கி.வீரமணி. பெரியார் உயிருடன் இருக்கும்போதே, கடந்த 1962ம் ஆண்டு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

பெரியார் மறைவுக்குப் பின், திராவிடர் கழகத் தலைவராக வந்த மணியம்மை, 1978ம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்துவிட, அவருக்குப் பின், திராவிடர் கழகத் தலைவராக, கி.வீரமணி பதவியேற்றுக் கொண்டார். இன்றளவும், பெரியாரின் கொள்கைப்படி, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தாரக மந்திரத்தை கி.வீரமணி பின்பற்றி வருகிறார்.

கி.வீரமணி பற்றி விக்கிப்பீடியா தமிழ் வெளியிட்டுள்ள வாழ்க்கை வரலாறு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.  

கி.வீரமணியும், திராவிடர் கழகத்தினரும், இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராட்டம் நடத்துவது வாடிக்கையான ஒன்று. சமீபத்தில், இந்து மத கடவுளான கிருஷ்ணர் பற்றி வீரமணி விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், அவரை கண்டித்து இந்து மத அமைப்புகள் பலவும், தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வருகின்றன. இதுபற்றிய தி இந்து தமிழ் திசை வெளியிட்ட செய்தியின் விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இதன்பேரில்தான், மேற்கண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சித்தரித்து வெளியிட்டுள்ளனர் என்பது, அதில் உள்ள வார்த்தைகளை படிக்கும்போதே புரிகிறது. இது தவிர, 29/03/2019 அன்று கி.வீரமணி இறந்துவிட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மார்ச் 31ம் தேதி கூட, ஊடகங்களுக்கு, கி.வீரமணி பேட்டி அளித்துள்ளார். ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படும் கி.வீரமணி இறந்திருந்தால், அது ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்றிருக்கும். ஆனால், அப்படி ஒரு செய்தி கூட எங்கேயும் வெளியாகவில்லை. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

2 நாள் முன்பு கூட ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஒருவரை, மார்ச் 29ம் தேதியே இறந்துவிட்டதாகக் கூறி, தவறாக சித்தரித்து, மேற்கண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இந்த பதிவை பகிர்ந்த ஓசிபிரியாணி ஃபேஸ்புக் பக்கம், ஒரு திராவிட எதிர்ப்பு சிந்தனை கொண்டது என்பது, அதன் பெயர், புரொஃபைல், கவர் ஃபோட்டோ மற்றும் வெளியிடும் பதிவுகளின்படி, தெரியவருகிறது. தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, இந்த ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, தொடர்ந்து திராவிட கட்சிகளின் அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தக் கூடிய பதிவுகளை அவர்கள் வெளியிட்டு வருவதும் உறுதி செய்யப்படுகிறது. ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) இது சித்தரிக்கப்பட்ட பதிவு.
2) அரசியல் காழ்ப்புணர்வின் பேரில் இப்படி தவறான தகவலை பரப்பியுள்ளனர்.
3) கி.வீரமணி இறந்திருந்தால், அது தமிழக அளவில் முக்கிய செய்தியாக பேசப்பட்டிருக்கும்.

முடிவு:

நமக்கு தெரியவந்த ஆதாரங்களின்படி, இது சித்தரிக்கப்பட்ட பதிவு என்பது உறுதி செய்யப்படுகிறது. தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக, இப்படி தவறான பதிவை பகிர்ந்துள்ளனர். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Avatar

Title:திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மறைவு: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Parthiban S 

Result: False