
பின்லாந்து அருகே கலாநிதி மாறனின் உல்லாச தீவு உள்ளதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Selva Rangam என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் உண்மையாலுமே கலாநிதி மாறனுக்குச் சொந்தமானதா என்ற சந்தேகத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அந்த புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது துபாய் அருகே உள்ள தீவு என தெரியவந்தது.

இதன்படி, பாரசீக வளைகுடாவில், துபாயை ஒட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான கடல்பரப்பில் செயற்கையாக சில தீவுக்கூட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2003ல் அந்த பகுதியில் மொத்தம் 300 செயற்கைத் தீவுகளை உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதில் சில தீவுகள் மட்டும் உருவாக்கப்பட்ட நிலையில், 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலை காரணமாக, அப்படியே பணிகள் கைவிடப்பட்டன. பின்னர், தனி நபர்கள், கட்டுமான நிறுவனங்கள் முயற்சி செய்து, இவற்றில் சில தீவுகளை உருவாக்கியுள்ளன. இந்த திட்டத்திற்கு பெயர் The World ஆகும்.
இதுபற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த பகுதியில் உள்ள தீவுகளை ஐரோப்பிய தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அரச பரம்பரையினர் என பலரும் கொண்டுள்ளனர். இதில் கலாநிதி மாறனுக்கு எந்த தீவும் இல்லை. அவர் ஒருவேளை வாங்கியிருந்தால், அது கண்டிப்பாக ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கும்.
துபாய் இளவரசருக்குச் சொந்தமான இடத்தில் ஒரு சிறு பகுதியை கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கருக்கு, பரிசாக அளித்துள்ளார். அந்த தீவைத்தான் பலரும் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான தீவு என சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். இதுபற்றி படிக்க இங்கே மற்றும் இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் கலாநிதி மாறனுக்குச் சொந்தமானதல்ல. அதனை அஜய் சிங்கிடம் இருந்து , அவர் வாங்கியிருந்தாலும், மீண்டும் அஜய் சிங் அந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கிவிட்டார்.
தற்சமயம், இதன் தலைமைச் செயல் அதிகாரியாக அஜய் சிங் உள்ளார். இதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் உள்ள தீவு, துபாய் கடற்கரையில் உள்ள செயற்கைத் தீவு. அது கலாநிதி மாறனுக்குச் சொந்தமானது இல்லை. அதேபோல, ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும், கலாநிதி மாறனிடம் இல்லை. அவர் மீண்டும் அதனை அஜய் சிங்குக்கே விற்றுவிட்டார் என தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான தகவலைக் கொண்டுள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஃபின்லாந்து அருகே கலாநிதி மாறனின் உல்லாச தீவு உள்ளதா?
Fact Check By: Pankaj IyerResult: False
