1300 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை: உண்மை என்ன?

ஆன்மீகம் சமூக ஊடகம்

‘’1300 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2

சமயம் தமிழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதில், நேபாளம் நாட்டில் உள்ள புத்தானிகந்தா கோவிலில் ஆதிசேஷன் மேல் படுத்திருக்கும் விஷ்ணு சிலையின் புகைப்படத்தை பகிர்ந்து, இது 1300 ஆண்டுகளாக நீரில் மிதக்கிறது, அறிவியலை கடந்த ஆச்சரியம், எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடுவது போல உண்மையிலேயே நேபாளத்தில் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை உள்ளதா என சந்தேகத்தில் ஆதாரம் தேடினோம். இதன்படி, நேபாளம் நாட்டின் தலைநகரில் இருந்து சற்று தொலைவில் ஷிவபுரி என்ற மலையின் அடிவாரத்தில் புத்தானில்கந்தா என்ற கோயில் உள்ளதாகவும், அதில்தான் இத்தகைய சிலை உள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

ஆனால், இவர்கள் குறிப்பிடுவதுபோல, அந்த கோயிலில் விஷ்ணு சிலை மிதந்தபடி இல்லை. அது தரையில் இருந்து சில அடி உயரமுள்ள பாம்பு போன்ற பீடத்தின் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குளத்தில் 2, 3 அடி உயரத்தில் நீர் நிரப்பினால், சிலை பார்ப்பதற்கு மிதப்பது போலத் தெரியும். இந்த உண்மை வெளியில் தெரியாமல் இருக்க, குறிப்பிட்ட சிலையை விதவிதமான அலங்காரங்களால் ஜோடிப்பதும் வழக்கம். மிகச்சிறிய அந்த குளத்தில் உள்ள நீரை வடித்துவிட்டு, சில நாட்களில் பூஜை நடத்துவதும் உண்டு. அப்படியான புகைப்பட ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

இதுபற்றிய செய்திகளை படிக்க இங்கே மற்றும் இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, மேற்கண்ட சிலை எரிமலையில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளை வைத்து செய்யப்பட்டது என்றும், அதனால்தான் நீரில் மிதக்கிறது என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். அதுவும் தவறான தகவல். இது நேபாளத்தில் உள்ளதிலேயே, பாறையில் வடிக்கப்பட்ட மிகக் கனமான கற்சிலையாகும். பாம்பு போன்ற பீடத்தில் விஷ்ணு சிலை படுத்திருப்பது போல வடிவமைத்து, அதனை சில அடி உயரத்திற்கு நீரில் நிரப்பி, பாற்கடலில் விஷ்ணு படுத்திருப்பதாகச் சித்தரிக்கிறார்கள். இவ்வளவுதான் இதில் உள்ள உண்மை.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அறிவியலை கடந்த ஆச்சரியம் – 1300 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை என்ற செய்தி தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதி செய்தபின், மற்றவர்களுக்கு பகிரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:1300 ஆண்டுகளாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை: உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •