கிறிஸ்தவத்தை பரப்ப தடையாக இருப்பது இந்து கோவில்கள்! – கமல் கூறியதாகப் பரவும் பகீர் ஃபேஸ்புக் தகவல்

அரசியல் சமூக ஊடகம்

“தமிழ்நாட்டில் கிறிஸ்தவத்தைப் பரப்பத் தடையாக இருப்பது இந்து கோவில்கள்தான். அதை ஒழிக்க இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டுள்ளது… அதில் கிறிஸ்தவர்களை நியமித்து கருணாநிதி துணை செய்தார்” என்று அமெரிக்க கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

KAMAL 2.png

Facebook Link I Archived Link

கமல்ஹாசன் போட்டோ கார்டு ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், கமலஹாசன் அமெரிக்காவில் கல்லூரி விழாவில் பேசிய பேச்சின் தமிழ் ஆக்கம் என்று குறிப்பிட்டுள்ளனர். “தமிழ்நாட்டில் பல வருடங்களாக கிறிஸ்தவம் மறைமுகமாக பரவி வர செய்துள்ளோம். ஆனால் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பது ஹிந்து கோயில்கள்தான். அதை ஒழிக்க ஏற்பட்ட அமைப்பே இந்து அறநிலையத்துறை. இதற்கு துணை திரு.கலைஞர். 60 சதவிகிதம் கிருஸ்வர்களை பணியில் அமர்த்தி அழகு பார்த்தவர் கலைஞர்” என்று உள்ளது.

இந்த பதிவை, Balasubramania Adityan T என்பவர் 2019 ஜூலை 28ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில் “காங்கிரஸ்,ஆர்எஸ்எஸ், திக,திமுக உள்பட எல்லாமே ஒன்று விட்ட சாக்கிய பௌத்த அண்ணன் தம்பிகளே…” என்று குறிப்பிட்டு இரண்டு யூடியூப் லிங்கை ஆதாரமாக கொடுத்துள்ளார்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் மத மாற்றம் அதிக அளவில் நடப்பதாக குற்றச்சாட்டு உண்டு. இதனால், தமிழகத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது எல்லாம் வரலாறு. இந்த நிலையில், நடிகர் கமல் கிறிஸ்தவத்துக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற பதிவை வெளியிட்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக இரண்டு யூடியூப் லிங்கை அளித்திருந்தனர். அதைப் பார்த்தோம்.

முதல் லிங்க்…

56 விநாடிகள் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், “கமல்ஹாசன் கிறிஸ்தவ மிஷனரி நிறுவனத்தில் கிறிஸ்தவத்தை (இயேசுவின் வார்த்தைகள் என்று சொல்லப்படுவதை) பரப்பும் வேலையை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்” என்று வீடியோ தொடங்குகிறது. அது அமெரிக்க கல்லூரியில் பேசியது இல்லை. பி.பி.சி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி ஆகும்.

அதில், “எதுவுமே திட்டமிட்டது இல்லை… ஒரு நடனக் கலைஞராக உதயசங்கர் சார் போல வர வேண்டும் என்று விரும்பினேன். அதன்பிறகு என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் உலகம் பற்றிய ஒருவித புரிதல் கிடைத்தது… நான் 40-50 நிகழ்ச்சிகளை மகாராஷ்டிராவில் நடத்தினேன். அதன்பிறகு நான் திரும்ப வரும்போது, சில ஆக்ரோபாட்டிக் முறைகளை செய்ய முயன்ற போது மேடையிலேயே என்னுடைய கால் எலும்பு முறிந்தது. அதன்பிறகு உங்களால் நடனமாட முடியாது என்று கூறினார்கள். அதனால், நான் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் சென்டரில் வேலைபார்த்தேன். இயேசுவின் வார்த்தைகளை உலகம் எங்கும் பரப்பும் பணி” என்று முடிகிறது.

இதில் எந்த இடத்திலும் மேற்கண்ட பதிவில் குறிப்பிட்டதுபோன்ற உரையாடல் இடம் பெறவில்லை.

இரண்டாவது யூடியூப் லிங்கை பார்த்தோம்…

இது மேடையில் பேசிய நிகழ்ச்சி போல இருந்தது. இதுவும் முழு வீடியோ இல்லை. 2.33 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது. தொடக்கமே, “அதுதான் என்னுடைய இலக்காக இருந்தது” என்று கமல் கூறுகிறார். தொடர்ந்து வீடியோவில் 40வது விநாடியில் மதம் தொடர்பான பேச்சு தொடங்கியது. “நான் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் சென்டரில் சேர்ந்து கிறிஸ்தவத்தை பணத்துக்காக பரம்பும் வேலையைச் செய்தேன். எந்த அளவுக்கு என்னுடைய சொந்த மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தேனோ… அதே அளவுக்குத்தான் கிறிஸ்தவத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தேன். உண்மையில் நான் பகுத்தறிவுவாதி! நான் அங்கு ரூ.120 ஸ்டேஃபண்ட் பணத்துக்காக சென்றேன். ஆனால், அது எனக்கு மிகப்பெரிய சிறந்த அனுபவமாக இருந்தது. கிறிஸ்தவத்தைப் பற்றி கற்றுக்கொண்டேன். என்னுடைய சொந்த மதத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன்… அது எனக்கு சினிமாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை கொடுத்தது” என்கிறார். பிறகு சினிமாவுக்குள் நுழைந்ததைப் பற்றிப் பேசுகிறார்… அந்த பகுதி அத்துடன் கட் செய்யப்படுகிறது.

அடுத்து ஒருவர் கேள்வி கேட்கிறார். “அன்பே சிவம் படத்தில் மாதவன், தசாவதாரம் படத்தில் அசின் கேட்ட அதே கேள்வியைத்தான் நான் கேட்கப்போகிறேன். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?”  அதற்கு கமல், இல்லை என்று கூறுகிறார்.

அதற்கு கேள்விகேட்டவர், “நீங்கள் கிறிஸ்தவத்தைப் பரப்பினேன் என்று கூறினீர்களே..” என்கிறார்.

உடன் கமல், “நான் டையப்பர் கூட அணிந்திருந்தேன்… அதற்காக” என்று சிரிக்கிறார்.

இந்த வீடியோவிலும், “கிறிஸ்தவத்தை மறைமுகமாக பரவி வர செய்துள்ளோம் என்றோ, இந்து கோவில்களை ஒழிக்க அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது என்றோ, அதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி உதவியாக இருந்தார் என்றோ, அறநிலையத் துறையில் 60 சதவிகிதம் கிறிஸ்தவர்களை பணியில் அமர்த்தினார் என்றோ கூறவில்லை.

“நான் ஒரு பகுத்தறிவாளனாக இருந்தும் சம்பளப் பணத்துக்காக கிறிஸ்தவத்தை பரப்பும் நிறுவனத்தில் பணியாற்றினேன்” என்று மட்டுமே கூறியுள்ளார்.

கமலின் பி.பி.சி முழு வீடியோ கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது 23.16 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ கிடைத்தது. அதில் இந்து மதத்தை அழிப்பது தொடர்பாக கமல் ஏதாவது பேசியுள்ளாரா என்று தேடினோம். ஆனால், அப்படி எதுவும் அவர் கூறவில்லை.

Archived Link

ஆய்வுக்கு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற இரண்டாவது வீடியோவும் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது இல்லை. மும்பை ஐ.ஐ.டி-யில் மாணவர்களுடன் உரையாடியது அது. ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் அந்த வீடியோ ஓடுகிறது. அந்த வீடியோவையும் முழுமையாக பார்த்தோம். அதிலும் அவ்வாறு கூறவில்லை.

Archived Link

அமெரிக்காவில் பேசியது குறித்து தேடினோம். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் கமல் பேசிய வீடியோ ஒன்று கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த வீடியோ ஓடுகிறது. 40வது நிமிடத்தில் அந்த பகுதி வருகிறது. அதில் எங்காவது இந்து மதத்தை அழிப்பது பற்றி பேசினாரா என்று பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் அவர் கூறவில்லை.

Archived Link

அந்த நேரத்தில் வெளியான விகடன் மற்றும் மாலைமலர் செய்திகள். ஒருவேளை கமல் இந்து மதத்திற்கு எதிராகப் பேசியிருந்தால் அப்போதே மிகப்பெரிய பிரச்னையாகி இருக்கும். எப்படி எந்த ஒரு செய்தியும் தமிழ், ஆங்கில ஊடகங்களில் வெளியாகவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்து கோவில்களை அழிக்க அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது. இதற்கு கலைஞர் துணையாக இருக்கிறார் என்று கமல் கூறியதாக வெளியான மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கிறிஸ்தவத்தை பரப்ப தடையாக இருப்பது இந்து கோவில்கள்! – கமல் கூறியதாகப் பரவும் பகீர் ஃபேஸ்புக் தகவல்

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •