
‘’காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன், பிராமணர் வேஷத்தில் வாழும் ஒரு முஸ்லீம்; அவனது உண்மையான பெயர் தாவூத் நவுஷத் கான்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதனை பலரும் ஷேர் செய்து வருவதால், இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
வதந்தியின் விவரம்:
…”Dawood Naushad Khan who claimed himself as Brahmin”
உண்மையை அறிய கடைசி வரை முழுவதுமாக படிக்கவும்.
அனைவராலும் பரவலாக பேசப்பட்ட சம்பவம். காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் கருவறைக்குள் காமகளியாட்டம் ஆடியது, இந்துமதத்திற்கு விழுந்த பேரிடி என்றே சொல்லலாம். அதன்பிறகு ஒழுக்கமாக வாழும் பிராமணர்களை எல்லாம் சமூகம் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்துவிட்டது.
பிராமணர்கள் பற்றிய விவாதம் வரும் போதெல்லாம் தேவநாதன் விஷயத்தை சொல்லி அதற்கு மேல் பிராமணர்கள் பேச முடியாத படி வாயை அடைத்து விடுவார்கள். தேவநாதனை பிராமணர் சங்கத்திலிருந்து ஒதுக்கி வைத்தாலும் அவர் இனிமேல் எந்த கோவிலிலும் பணி செய்ய தடை விதித்து விட்டாலும் இன்னமும் அந்த அழுக்கை பிராமணர்கள் சுமந்து கொண்டே தான் வாழ்கின்றனர். அவ்வளவு சீக்கிரம் அது மறையாது.
ஆனால் வாரம் இரண்டு பாதிரியார்களும் இஸ்லாமிய மதகுருமார்களும் இதே கற்பழிப்பு விஷயத்தில் சிக்கினாலும் அதை கண்டும் காணாமல் போய்விடுகின்றனர் சில விஷ ஜந்துக்கள். பிராமணர்கள் செய்தால் மட்டும் தான் கற்பழிப்பு. அவர்களுக்கு மட்டும் ஆண்மை இருக்கிறது என்று எண்ணுகிறார்களோ என்னவோ இந்து மத துரோகிகள்.
#சரி_விஷயத்திற்கு_வருவோம்.
அஜித் நடித்த பரமசிவன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் இஸ்லாமிய தீவிரவாதி ஒருவன் சிறுவயதிலிருந்தே அய்யங்கார் வேஷம் போட்டு வேதநூல்களை எல்லாம் படித்து திருமண் இட்டு குடுமி வைத்து பஞ்சகச்சம் கட்டி அக்மார்க் அய்யங்கார் போல் நடித்து தீவிரவாதம் செய்வார்.
அதேபோல் தான் இந்த காஞ்சிபுரம் விஷயமும். அவரது இயற்பெயர் #தாவூத்_நெளஷத் #கான் என்பதை #தேவநாதன் என்று மாற்றி தான் ஒரு அநாதை என்றும் சிவாச்சாரியார் குடும்பத்தை சார்ந்தவனென்றும் பொய் சொல்லி காஞ்சிபுரம் பாடசாலையில் வேதம் படிக்க சென்றுள்ளார்.
வாத்தியாரும் சிறுவனின் மேல் பரிதாபப்பட்டு தன் வீட்டிலேயே தங்க வைத்து உபநயனம் செய்து வேதபாடங்களை உபதேசித்துள்ளார்.
பரம்பரை பரம்பரையாக தான் பூஜை செய்து வரும் கோவிலையும் அவர் தேவநாதனுக்கு விட்டு கொடுத்துள்ளார்.
இதற்கெல்லாம் மேலாக பாதிக்கப்பட்ட பெண்கள் இவர் சுன்னத் செய்துள்ளதையும் நீதிமன்றத்தில் உறுதிபடுத்தியுள்ளனர். இன்னும் என்னென்ன மர்மமெல்லாம் இருக்கோ இறைவா.
இந்த தகவல்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை (26.04.2019)அன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது வெளிக்கொணரப்பட்டது. தகவல்களை சென்னை உயர்நீதிமன்ற #வக்கீல் #Aravind Advocate அவர்களை கொண்டு உண்மை தன்மையை ஆராய்ந்தே பதிவிட்டுள்ளேன்.
நன்றி திரு மொஸாட்…
Archived Link
கடந்த ஏப்ரல் 29ம் தேதி Hari Hara Seva என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பிராமணர்களுக்குள், முஸ்லீம்கள் ஊடுருவி, பிராமண சமூகத்திற்கு கெட்டப் பெயர் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்கள் என்றும், அர்ச்சகர் தேவநாதன் சுன்னத் செய்திருந்ததாக, அவருடன் உடலுறவு கொண்ட பெண்கள் பலரும் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளனர் என்றும் பலவித முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி உண்மையா என சரிபார்ப்பதற்காக, முதலில் கூகுள் உதவியை நாடினோம். அர்ச்சகர் தேவநாதன் வழக்கு பற்றி விரிவான தகவல்கள் கிடைத்தன. ஆனால், அதில் எங்கேயும் அர்ச்சகர் தேவநாதன் ஒரு முஸ்லீம், அவர் சுன்னத் செய்திருந்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளது, என குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக, இவர்கள் குறிப்பிடும் 26.04.2019 அன்று தேவநாதன் வழக்கில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

கடந்த 2009ம் ஆண்டு காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயிலுக்கு வழிபட வந்த பெண்களிடம் செக்ஸ் லீலை செய்து, அதனை வீடியோ எடுத்து மாட்டிக் கொண்டவர் அர்ச்சகர் தேவநாதன். இவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுக்கப்பட்டார். இதுபற்றி காஞ்சிபுரம் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கு விசாரணை பின்னர், செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக, இந்த வழக்கு விசாரணை மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதுபற்றி தி இந்து தமிழ் வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்த விவகாரத்தில், கடைசியாக, 2018ம் ஆண்டு விசாரணை நடைபெற்றுள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின்னரும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுபற்றி விகடன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனினும், எந்த ஒரு இடத்திலும் அர்ச்சகர் தேவநாதன் ஒரு முஸ்லீம் என்று போலீசாரோ, வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் சாட்சிகளோ, நீதிபதியோ என யாருமே குற்றம் சாட்டவில்லை.
உண்மை இப்படியிருக்க, அர்ச்சகர் தேவநாதன் விவகாரத்தை திடீரென கையில் எடுத்துக் கொண்டு, அவரை முஸ்லீம் என பலரும் சித்தரிக்க தொடங்கியுள்ளனர். இவ்வாறு பதிவிடும் பலரும் தங்களது சுயலாபத்திற்காக, இதனைச் செய்கிறார்கள் என உறுதி செய்யப்படுகிறது. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு ஒரு தவறான வதந்தி என்று சந்தேகமின்றி நிரூபணமாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தால், அதுபற்றி சம்பந்தப்பட்டவர் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் உண்மையில் ஒரு முஸ்லீம்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை
Fact Check By: Parthiban SResult: False
