கேரள ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

எச்.ராஜா புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், "மகிழ்ச்சி, வாழ்த்துகள், கேரள மாநில ஆளுநராக, ஹெச்.ராஜா நியமனம்..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Veerappan Veerappan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக பாஜக.,வில் இருந்து ஏற்கனவே இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டவர்கள் ஆளுநர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கேரள ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றபோதே எச்.ராஜா மாநிலங்களவை எம்.பி-யாக நியமிக்கப்பட்டார் என்று வதந்தி பரவியது. பின்னர் அவர் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார் என்று செய்தி கிளம்பியது. அவ்வப்போது இப்படி பா.ஜ.க-வினர் மத்தியில் தகவல் பரவுவது வாடிக்கையாக உள்ளது. இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

Asianet Tamil Link I Zee news Link

ஆனால், சிலர் ஒருபடி மேலே சென்று, எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட்டுவிட்டார் என்று கூறி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

புதிய ஆளுநர்கள் பட்டியலில் எச்.ராஜா பெயர் இருக்கலாம். அவரை பா.ஜ.க தலைவர்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்வு செய்து வைத்திருக்கலாம். அதற்குள், அவர் நியமிக்கப்பட்டுவிட்டார் என்று பலரும் பதிவிட்டு வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். ஆளுநர்களைக் குடியரசுத் தலைவர்தான் நியமனம் செய்வார். எனவே, எச்.ராஜாவை கேரள மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளாரா என்று பார்த்தோம். குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

உண்மைப் பதிவைக் காண: presidentofindia.nic.in I Archive

தினமலர் உள்ளிட்ட சில ஊடகங்களில் பாஜக தலைமை பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா என இருவரையும் அழைத்து பேசியதாகவும், இதைத் தொடர்ந்து கேரள மாநில ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் செய்தி வெளியிட்டிருந்தன.

எச்.ராஜா கேரள ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரா என தமிழ்நாடு பா.ஜ.க முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம். அதற்கு அவர், "ஆளுநர் நியமனம் என்பது பிரதமர், உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவர் சம்பந்தப்பட்டது. அவர்கள்தான் முடிவு செய்வார்கள். எச்.ராஜா அவர்களை நியமித்து எந்த ஒரு உத்தரவும் வெளியாகவில்லை" என்றார். பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசும் போது எச்.ராஜா நியமிக்கப்பட உள்ளதாக கூறுகின்றனர். சிலர் அதற்கு வாய்ப்பு குறைவு என்றும் கூறுகின்றனர். எச்.ராஜாவுக்கு முன்பாக பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் என்று பலரும் இருப்பதால் எச்.ராஜா நியமிக்கப்பட வாய்ப்பு குறைவுதான். இருப்பினும் அவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்றனர்.

இது தொடர்பாக கருத்தை அறிய எச்.ராஜாவைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. அவருக்கு உதவியாளர்கள் என்று யாரும் இல்லாத சூழலில், அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ‘’இப்படி எந்த ஒரு தகவலும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. ஆனால் அப்படி அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது,’’ என்று கூறினர். இந்த கட்டுரை வெளியான ஏப்ரல் 23, 2022 தேதி வரையில் எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்!

இதன் அடிப்படையில் எச்.ராஜா கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுவிட்டார், கேரள மாநில ஆளுநராக பதவி ஏற்க உள்ளார் என்று பகிரப்படும் பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகின்றன.

முடிவு:

கேரள மாநில ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட்டார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கேரள ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட்டாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False