கல் உப்பை வாயில் வைத்தால் ஹார்ட் அட்டாக் சரியாகுமா? – விபரீத ஃபேஸ்புக் பதிவு!

சமூக ஊடகம் மருத்துவம் I Medical

‘’ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். இரண்டு கல் உப்பை நாக்கின் அடியில் அல்லது உதட்டினுள் வைத்து தண்ணீர் அருந்தினால் போதும், சரியாகிவிடும்,’’ என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

நெஞ்சுவலியால் மார்பைப் பிடித்தபடி உள்ள ஒருவர் வரைபடத்தை வெளியிட்டு, அதன் கீழ் “இதய அடைப்பு (ஹார்ட அட்டாக்) ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். உடனடியாக இரண்டு கல் உப்பை எடுத்து நாக்கின் அடியில் அல்லது உதட்டின் உள்ளே வைத்து சிறிதளவு தண்ணீர் குடித்தால் குணமடையும் – மறைக்கப்பட்ட உண்மைகள்… இந்த தகவலை பகிரவும்” என்று கூறப்பட்டுள்ளது.

மதுரை நண்பன் என்பவர் இந்த பதிவை 2019 ஏப்ரல் 9ம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று நம்பி ஆயிரக் கணக்கானோர் இந்த பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உடலின் ஒவ்வொரு உறுப்பும், திசுக்களும் இயங்கத் தேவையான ஊட்டச்சத்து, ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பணியை ரத்தம் செய்கிறது. கார்பன் டை ஆக்ஸைடு உள்ள கெட்ட ரத்தத்தை நுரையீரலுக்கும், நுரையீரலிலிருந்து வரும் ஆக்சிஜன் உள்ள நல்ல ரத்தத்தை உடலின் மற்ற பகுதிக்கும் பம்ப் செய்து அனுப்பும் வேலையை இதயம் செய்கிறது. இதயத்துக்குத் தேவையான ரத்தம் மூன்று ரத்தக் குழாய்கள் வழியாக பாய்கிறது. இதில், அடைப்பு ஏற்படுவதையே மாரடைப்பு என்கிறோம்.

அதிக அளவில் கொழுப்பு சேர்வது, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், புகைபிடித்தல் ஆகிய ஐந்து முக்கிய காரணிகளால் மாரடைப்பு வருகிறது. இதுதவிர, மரபியல் உள்ளிட்ட வேறு பல காரணங்களும் உள்ளன என்கின்றனர் மருத்துவர்கள். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மாரடைப்பு என்றால் என்ன, யாருக்கு வரும், அறிகுறிகள், முதலுதவி, சிகிச்சை முறைகள் பற்றி சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம் அளித்த பேட்டியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதேநேரத்தில், மாரடைப்பு வந்தால், தாமதிக்காமல் ரத்தக் குழாய் அடைப்பை சரி செய்யும் வசதி உள்ள மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டுவருவது அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இதய திசுக்கள் உயிரிழப்பை தவிர்க்க முடியாது. மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு முன்பு நோயாளிக்கு ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்கலாம். இது ரத்த தட்டணுக்கள் உறைவதைத் தடுத்து, ரத்த ஓட்டம் கிடைக்க உதவும் என்கின்றனர் இதய நோய் சிகிச்சை நிபுணர்கள். மாரடைப்பு வந்தால் என்ன முதலுதவி செய்யலாம் என்பது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இப்படி இருக்கையில், ஆஸ்பிரின் மாத்திரையை நாக்கு அல்லது உதட்டின் கீழ் வைப்பது போல கல் உப்பை வைக்கச் சொல்கிறது இந்த பதிவு. அதுவும் கல் உப்பை வைத்தபின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி சொல்லவில்லை. கல் உப்பை வைத்தாலே மாரடைப்பு சரியாகிவிடும் என்று கூறியுள்ளனர். கல் உப்பின் மருத்துவ குணங்கள் பற்றி ஆய்வுகள் என்ன கூறுகின்றன என்று பார்த்தோம். அதில், மாரடைப்பை குணப்படுத்தும் என்று எந்த ஒரு தகவலும் இல்லை. கல் உப்பின் மருத்துவ பயன்கள் தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பொதுவாக இதய நோயாளிகள் உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவிலோ மாரடைப்பை குணமாக்கும் என்று உள்ளது. இது பற்றி சித்த மருத்துவம் என்ன சொல்கிறது என்று ஆராய்ந்தோம். உப்பு அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் இதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்பு வரும் என்று கூறப்பட்டு இருந்தது. உப்பு அதிக அளவில் எடுத்து வந்தால் சீரற்ற இதயத் துடிப்பு, சிறுநீரக பிரச்னை, மூளையின் செயல்பாடுகளில் தடுமாற்றம் போன்றவை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

உப்பு சாப்பிட்டால் மாரடைப்பு சரியாகும் என்பதற்கு எந்த ஆய்வும், ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை. இது குறித்து வேலூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் கேட்டோம்.

டாக்டர் விக்ரம் குமார்

“உப்பு விறுவிறுப்பைக் கொடுக்கும் என்று சொல்வர்கள். ஆனால், அதை நம்பிக்கொண்டு இருக்க முடியாது. உப்பை நாக்கின் அடியில் வைப்பதால் மாரடைப்பு குணமாகாது. அதேபோல், வேகமாக இருமினால் மாரடைப்பு சரியாகிவிடும் என்றும் சொல்வார்கள். மூச்சை இழுத்து வேகமாக இரும்பும்போது ஆக்சிஜன் உடலுக்குள் அதிகமாக செல்லும் என்று அப்படி சொல்லியிருக்கலாம். மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பது போல் செய்தால், அது பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம். எனவே, உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதுதான் நல்லது” என்றார்.

நமக்கு கிடைத்த ஆதாரங்கள், டாக்டரின் பேட்டி அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கல் உப்பை வாயில் வைத்து தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு சரியாகாது… உயிரிழப்புக்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, இது போன்ற விபரீத முயற்சியில் இறங்காமல், உரிய மருத்துவ உதவியை நாடுவதன் மூலம் உயிரைக் காக்கலாம். உயிர் காக்கும் மருத்துவ டிப்ஸ்களை பகிரும்போது கூடுதல் கவனத்துடன் அதை சரிபார்த்து பகிர்வது நல்லது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கல் உப்பை வாயில் வைத்தால் ஹார்ட் அட்டாக் சரியாகுமா? – விபரீத ஃபேஸ்புக் பதிவு!

Fact Check By: Praveen Kumar 

Result: False