பிரதமரை ‘சௌகிதார் சோர் ஹே’ என்ற சிறுமி: வைரல் வீடியோ உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

தன்னைப் பார்த்து கை அசைத்த சிறுமியை அழைத்து மேடையில் பிரதமர் மோடி பேச வைத்ததாகவும், அந்த சிறுமி, “சௌகிதார் சோர் ஹே” என்றதாகவும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

வீடியோவில், மோடி ஒரு சிறுமியை மேடையில் பேசச் செய்கிறார். அந்த சிறுமி, “சௌகிதார் சோர் ஹே” என்று சொல்கிறார். இந்த வீடியோவை Rajamohamad Raja என்பவர் 2019 மே 5ம் தேதி பதிவிட்டுள்ளார்.

“கூட்டத்தில் தன்னை பார்த்து கை அசைத்த குழந்தையை மைக் அருகே கொண்டு போய் பேச வைத்து சைன் செய்ய நினைத்த மோடிக்கு சிறுமியின் செருப்படி performance, “காவலாளி கள்ளன்” என ஐயா கொஞ்சம் கூட எதிர் பார்க்கல.!” என்று நிலைத்தகவலுடன் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ உண்மை என்று நம்பி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடியின் ஒவ்வொரு நிகழ்வும் முக்கியத்துவம் பெற்றதுதான். சிறுமி இப்படி கூறியிருந்தால் அது மிகப்பெரிய டிரெண்ட் ஆகி இருக்கும். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் வெளியானதாக நினைவில் இல்லை. இதனால், மோடியிடம் காவலன் திருடன் என்று சிறுமி சொன்னது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

MODI 2.png

வீடியோவில் உள்ள ஒரு ஃபிரேமை மட்டும் எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, hindi.boomlive.in வெளியிட்ட இந்தி செய்தி மட்டுமே கிடைத்தது.

MODI 3.png

இதனால், மீண்டும் படத்தை yandex.comல் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் தொடர்பான உண்மையான செய்தியும், இது தொடர்பாக பரவிய வதந்திகளின் உண்மை நிலவரம் பற்றிய உண்மை கண்டறியும் சோதனை முடிவுகளும் நமக்குக் கிடைத்தன.

MODI 4.png

முதலில், இந்த வீடியோ தொடர்பான உண்மை செய்தியைப் பார்த்தோம். 2016ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி இந்த செய்தி வெளியாகி இருந்தது. (செளகிதார் சோர் ஹே என்ற வாசகம் 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்தான் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.) பிரதமர் மோடி, தன்னுடைய பிறந்தநாளை மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கொண்டாடியது தொடர்பான செய்தி அது. “இதற்கு முன்பு எந்த பிரதமராவது மாற்றுத் திறனாளிகள் மத்தியில் பிறந்தநாளை கொண்டாடியது உண்டா” என்று மோடி கேட்டதாகத் தலைப்பிடப்பட்டு இருந்தது.

அந்த செய்தியில், மேடையில் “சௌகிதார் சோர் ஹே” என்று சிறுமி கூறியதாக எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த செய்தியின் கீழ், பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி இருந்த அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவும் இருந்தது. அதில், என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று வீடியோ போஸ்ட் செய்யப்பட்டு இருந்தது.

Archived link

வீடியோவில், சிறுமியை மேடையில் உள்ள போர்டியத்தில் பேசவைக்க, பிரதமர் மோடி அழைத்து வந்து தூக்கிப் பிடிக்கிறார். அந்த சிறுமி, ராமாயணத்தில் இருந்து சில பகுதிகளை சொல்கிறார். சிறுமியை மோடி ஆசிர்வதிக்கிறார். கூட்டத்தினர் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்கின்றனர். இதன் மூலம், உண்மை வீடியோவை எடுத்து ஒலியை மட்டும் மாற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியானது.

உண்மை கண்டறியும் ஆய்வில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தோம். உண்மையில், கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் நோக்கில், “ராகுல் காந்தி பப்பு” என்று அந்த சிறுமி சொல்வது போல் ஒலியை மாற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இதைத்தான் உண்மை கண்டறியும் சோதனையில் பொய் என்று உறுதி செய்துள்ளனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும், இந்த உண்மை கண்டறியும் சோதனையில் தூர்தர்ஷன் வெளியிட்ட முழு வீடியோவும் கிடைத்தது. வீடியோ கீழே…

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கிண்டல் செய்ய பயன்படுத்திய வீடியோவைக் கொண்டு, மோடியிடம் கிண்டல் செய்திருப்பது தெரிந்தது. இதன் மூலம், மேடையில் “சௌகிதார் சோர் ஹே” என்று சிறுமி கூறியதாக வெளியான வீடியோ பொய்யானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பிரதமரை ‘சௌகிதார் சோர் ஹே’ என்ற சிறுமி: வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False