
‘’குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோழிக்கோட்டில் போராட்டம் நடத்திய மக்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Video Link |
TMMK News எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது. இதில், இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் ஏராளமான மக்கள் நிற்பதைக் காண முடிகிறது. இதனை பகிர்ந்தவர், கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்துக் கூடிய கூட்டம், என்று எழுதியுள்ளதால், பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோவில் கூறியுள்ளது உண்மையா என்ற சந்தேகத்தில் மீண்டும் ஒருமுறை அந்த வீடியோவை பார்வையிட்டோம். பிறகு, அந்த பதிவின் கீழே பகிரப்பட்டுள்ள கமெண்ட்களை விரிவாகப் படித்து பார்த்தோம். அப்போது, இது தவறான தகவல் என்றும், இந்த வீடியோ 2016ல் எடுக்கப்பட்டது என்றும் கூறி ஒருவர் கமெண்ட் பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது.

மேற்கண்ட கமெண்டில் உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்தபோது, அது 2016, பிப்ரவரி 16 அன்று யூ டியுப்பில் ‘Samastha 90th Anniversary ‘ Helicam Video ‘ Masha Allah‘ எனும் தலைப்பில் பதிவேற்றப்பட்டிருந்ததாக தெரியவந்தது.
அந்த வீடியோவை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இதில் கூறப்பட்டுள்ளதுபோல, Samastha 90th Anniversary என்ற கீவேர்டை பயன்படுத்தி, கூகுளில் விவரம் தேடினோம். அப்போது, இதுதொடர்பான நிறைய புகைப்படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் கிடைத்தன.

இதன்படி, சமஸ்தா (எ) சமஸ்தா கேரளா ஜமியாதுல் உலமா எனும் இஸ்லாமிய அமைப்பு கடந்த 1924ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். சன்னி பிரிவு இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட சலாஃபி சீர்திருத்த இயக்கத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட இந்த சமஸ்தா அமைப்பின் தலைமையிடம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ளது. இது பின்னாளில், கேரள சமஸ்தான ஜாமியாதுல் உலமா, சமஸ்தா ஈகே ஃபேக்ஷன், சமஸ்தா ஏபி ஃபேக்ஷன் என 3 பிரிவுகளாக பிரிவடைந்தது.
இந்த சமஸ்தா அமைப்பு தொடங்கப்பட்டதன் 90ம் ஆண்டு நிறைவு விழா, கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 11 முதல் 14 வரை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வை, சமஸ்தா ஈகே ஃபேக்ஷன் முன்னின்று நடத்தியது.
The Hindu News Link | Archived Link |
சமஸ்தா 90வது ஆண்டு விழாவில் எடுக்கப்பட்டதுதான் மேற்கண்ட வீடியோ. அதனை தவறான தகவலுடன் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில், தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோழிக்கோட்டில் போராட்டம்: வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
