ஃபேஸ்புக் வைரல்: குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினாரா மதுவந்தி?

அரசியல் சார்ந்தவை | Political சமூக ஊடகம் | Social சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

ஒய்.ஜி மககேந்திரனின் மகள் மதுவந்தி அருண் குத்துப்பாட்டுக்கு நடனமாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் குத்துப் பாட்டுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. வெறும் 23 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. நிலைத் தகவலில்,” 8000 கோடி தடவ பார்த்தாலும் சளைக்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Niyas Ahamed என்பவர் 2020 மே 2ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடக எழுத்தாளர், நடன அமைப்பாளர், கல்வியாளர் என சமூகத்தில் பிரபலமானவர் மதுவந்தி. ஒய்.ஜி.மகேந்திரன் மகள். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்வது வழக்கம். ஒய்.ஜி.மதுவந்தி குத்துப் பாடல் ஒன்றுக்கு நடனமாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இது உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவை ஆய்வு செய்தோம். வீடியோவில் பாடலுக்கும் நடனத்துக்கும் தொடர்பில்லை. ஆடியோ மட்டும் எடிட் செய்து சேர்த்தது போல உள்ளது. எனவே, மதுவந்தியின் நடனம் ஏதாவது சமூக ஊடகங்களில் உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்போது. 2011ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்று நமக்கு கிடைத்தது. பாரத் கலாச்சார் மார்கழி மகாத்சோவ் – மதுவந்தி அருண் நாட்டியம் என்று தலைப்பிடப்பட்டு அந்த வீடியோ வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று ஆரஞ்சு நிற ஆடை அணிந்திருந்தார் மதுவந்தி.

அந்த வீடியோவின் 5.40வது நிமிடத்தில் தொடங்கி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள காட்சிகள் வந்தன. ஆனால், அதில் குத்துப் பாடல் இல்லை. வழக்கமான பரதநாட்டிய பின்னணி பாடலே இருந்தது. வீடியோவின் தொடக்கத்தில் ராமாயண காட்சிகளை நடன வடிவில் வழங்குவதாக அவர் கூறுகிறார்.

இதன் மூலம் குத்துப் பாடலுக்கு மதுவந்தி நடனமாடியதாக பகிரப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஃபேஸ்புக் வைரல்: குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினாரா மதுவந்தி?

Fact Check By: Chendur Pandian 

Result: False