மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என்று நிர்மலா அறிவித்தாரா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஆனந்த விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மின் மயானத்திற்க்கும் இனி ஜிஎஸ்டி வரி! மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Manoharan Karthik Karthik Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 7ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

சமூக ஊடகங்களிலும் பலரும் ஆனந்த விகடன் வெளியிட்டதாக இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். அதில், “மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி வரி! மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு! எல்.இ.டி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு! – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் நியூஸ் கார்டை பாதியாக வெட்டி பகிர்ந்திருந்தனர்.

மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவை நிர்ணயிப்பது இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்கிறது. எனவே, மத்திய அரசு அறிவிப்பு என்று கூறுவது தவறானது. எல்.இ.டி பல்பு, பேனா மை போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி உயர்த்தப்பட்ட போது மின் மயானம் பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும், இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக ஆனந்த விகடன் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன. இருப்பினும், ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. எனவே, ஆனந்த விகடன் சமூக ஊடகம், இணையதள பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு இந்த நியூஸ் கார்டு உண்மையா என கேட்டோம். அவரும் இது போலியானது, நாங்கள் வெளியிட்டது இல்லை என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் மின் மயானத்துக்கும் இனி ஜிஎஸ்டி என நிர்மலா சீதாராமன் அறிவித்ததாகப் பரவும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மின் மயானத்துக்கும் ஜிஎஸ்டி என நிர்மலா சீதாராமன் அறிவித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என்று நிர்மலா அறிவித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False