
‘’தங்கச்சியை #பலாத்காரம் செய்தவனின் தலையை வெட்டிய #வீரமான அண்ணன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Pmkpavun Kumar என்பவர் இந்த பதிவை, மே 22ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், போலீஸ் நிலையத்தில் ரத்தக்கறையுடன் கையில் ஒரு தலையை வைத்துக் கொண்டு நிற்கும் ஒரு இளைஞரின் 3 புகைப்படங்களை ஒன்றாகச் சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதன் மேலே, ‘’ தங்கச்சியை #பலாத்காரம் செய்தவனின் தலையை வெட்டிய #வீரமான அண்ணன் (சென்னை). எல்லா குற்றத்திற்கும் சட்டத்தை #கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவு உண்மையானதா என்ற சந்தேகத்தின் பேரில், குறிப்பிட்ட புகைப்படத்தை Yandex இணையதளத்தில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதே புகைப்படம் கிடைக்காத போதிலும், இதுதொடர்பான மற்ற புகைப்படங்களும், செய்தி ஆதாரங்களும் கிடைத்தன.

இதன்படி, நமக்கு கிடைத்த செய்தி ஆதாரங்களில், அந்த நபர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் பசுபதி என்றும் தெரியவந்தது. அவரது நண்பர் கிரிஷ் என்பவர், பசுபதியின் தாயாருடன் வாக்குவாதம் செய்ததோடு, அவரைப் பற்றி ஆபாசமாகவும் விமர்சித்துள்ளர். இதனால், ஆத்திரம் அடைந்த பசுபதி நண்பன் என்றும் பாராமல், தனது நண்பனின் தலையை துண்டித்துக் கொன்றார். அந்த தலையை கையில் எடுத்துக் கொண்டு, போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து சரணடைந்தார் என்றும் நமக்குக் கிடைத்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது. இச்சம்பவம் மண்டியா மாவட்டத்தில உள்ள சிக்கபகிலு என்ற ஊரில் 2018ம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, சிக்கபகிலு என்ற பகுதியில் ஏதேனும் கொலை சம்பவம் நிகழ்ந்ததா என்ற ரீதியில், மீண்டும் கூகுளில் தேடினோம். அப்போது, இச்சம்பவம் செப்டம்பர் 29, 2018 அன்று நடைபெற்ற ஒன்று எனவும், இது உண்மையானதுதான் எனவும் தகவல்கள் கிடைத்தன.
இதுபற்றி டிவி9 கன்னடா வெளியிட்ட வீடியோ செய்தி ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தி நியூஸ் மினிட் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, இச்சம்பவம் சென்னையில் நடைபெறவில்லை என்று உறுதியாகிறது. அத்துடன், தனது தங்கையை பலாத்காரம் செய்தவன் தலையை வெட்டிக் கொன்ற வீரமான அண்ணன் என்ற தகவலும் தவறாகும். இச்சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. தனது தாயை பழித்தமைக்காக, நண்பன் என்றும் பாராமல் அவரது தலையை வெட்டி, இந்த நபர் கொன்றுள்ளார் என்பதுதான் உண்மையான செய்தி.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை நமது வாசகர்கள் யாரும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தங்கையை பலாத்காரம் செய்தவனின் தலையை துண்டித்த வீரமான அண்ணன்: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Parthiban SResult: False
