கட்டுக்கட்டா கள்ள நோட்டுகள்… பாகிஸ்தானில் அடிக்கப்படுகிறது- வைரல் வீடியோவால் பரபரப்பு!

சமூக ஊடகம் பொருளாதாரம் I Economy

பாகிஸ்தானில் இந்திய பணம் கள்ள நோட்டு அடிக்கும் நிறுவனம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு:

தகவலின் விவரம்:

இந்தியன் பணம் கள்ளநோட்டு அடிக்கும் கம்பெனி பாக்கிஸ்தானில்…!

அதிர்ச்சி காணொலி…!

Archived link

இந்த வீடியோவில், ஒருவர் இந்திய ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கிறார். அவர் பின்னணியில் அச்சு இயந்திரம் ஒன்று உள்ளது. 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் சர்வ சாதாரணமாக கிடக்கின்றன. வீடியோவில் அந்த இடம் பாகிஸ்தான் என்றோ, கள்ள நோட்டு அச்சிடப்படுகிறது என்றோ கூறவில்லை. ஆனால், ஃபேஸ்புக் நிலைத்தகவலில், இந்திய பணம் கள்ள நோட்டு பாகிஸ்தானில் அச்சடிக்கும் நிறுவனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை, எங்கிருந்துடா வரீங்க என்ற ஃபேஸ்புக் குழு 2019 மே 15ம் தேதி வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வெறும் 50 விநாடிகள் ஓடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கள்ள நோட்டு அச்சடிக்கப்படுகிறது என்று கூறுவதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இந்த வீடியோவில் இல்லை.

வீடியோவை நன்கு உற்று பார்த்தபோது, அதில் எதிலும் ரூபாய் சின்னம் இல்லை. பொதுவாக ரூபாய் நோட்டுக்களில், எண்களுக்கு முன்பாக ரூபாய் சின்னம் இருக்கும். ஆனால், இந்த நோட்டுக்களில் சின்னம் இல்லாமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

FAKE MONEY 2.png

மற்றொரு பிரேமில், இந்திய ரிசர்வ் வங்கி என்று ஆங்கிலத்தில் இருக்கும் இடத்தில் இந்தியில் எழுதப்பட்டு இருந்தது. இதனால், பார்க்க கள்ள நோட்டு போல இது தெரியவில்லை. உண்மையான ரூபாய் நோட்டுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தபோது இது உறுதியானது.

FAKE MONEY 3.png

உண்மையைக் கண்டறிய, வீடியோவின் ஒரு ஃபிரேமை எடுத்து கூகுள் ரிவர்ஸ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ தொடர்பான சில உண்மை கண்டறியும் ஆய்வு முடிவுகள் நமக்கு கிடைத்தன.

FAKE MONEY 4.png

இந்த வீடியோ பதிவில் உள்ளது கள்ள நோட்டு இல்லை. குழந்தைகள் விளையாடும் டம்மி நோட்டுக்கள் என்பது தெரியவந்தது. அதில், இந்தியில் மனோரஞ்சன் பேங்க் ஆஃப் இந்தியா என்றும் ஆங்கிலத்தில் ரிசர்வ் பேங்க் ஆஃப் சில்ட்ரன்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் செய்திகளில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், இந்த பிரிண்டிங் பிரஸ் எங்கு உள்ளது என்பது உள்பட எந்த ஒரு தகவலும் அதில் இல்லை. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதைவிட இன்னொரு ஆச்சரியம் நமக்கு காத்திருந்தது. இந்த குழந்தைகளுக்கான நோட்டு ஏ.டி.எம்-ல் வந்தது என்று பல புகார்கள் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக ஏ.டி.எம் இயந்திரத்தில் டம்மி பணத்தை வைத்து ஏமாற்றியதாக ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பும் நிறுவனத்தின் நபர்கள் கைது செய்யப்பட்ட செய்திகளும் கிடைத்தது.

இது தொடர்பாக வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி ரூபாய் நோட்டு நம்பகத்தன்மை கண்டறியும் இயந்திரத்தில் பரிசோதித்த பிறகே பெற முடியும். இதனால், வங்கியில் இருந்து டம்மி ரூபாய் நோட்டு செல்ல வாய்ப்பில்லை. பணம் நிரப்பும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அசல் நோட்டுக்குப் பதில், டம்மி நோட்டுக்களை வைத்துள்ளனர்” என்றார். இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், மேற்கண்ட வீடியோவில் கள்ள நோட்டு அச்சிடப்படவில்லை. அது குழந்தைகளுக்கான விளையாட்டு பணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கட்டுக்கட்டா கள்ள நோட்டுகள்… பாகிஸ்தானில் அடிக்கப்படுகிறது- வைரல் வீடியோவால் பரபரப்பு!

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •