
‘’எம்ஜிஆர் ஒரு முஸ்லீம், அவரது உண்மையான பெயர் முகமது காஸ் ரஹ்மத்துலா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை Mubarak Abdul Majeeth என்பவர் ஜூலை 25, 2018 அன்று வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை பலரும் உண்மை என நினைத்து குழம்ப தொடங்கியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு தமிழர்கள் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவரது முழு பெயர், மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் ஆகும். அவர், ஜனவரி 17, 1917 அன்று இலங்கையின் கண்டி அருகே உள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் பிறந்தார். எம்ஜிஆரின் தந்தை ஆங்கிலேய அரசில், கேரளா பகுதியில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, இலங்கை சென்று பள்ளி தலைமை ஆசிரியர் பணி செய்தார். அப்போது பிறந்தவர்தான் எம்ஜிஆர். தந்தை இறந்தபின், எம்ஜிஆர் குடும்பத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் வந்து குடியேறினார். அவரது தந்தை பெயர் மருதூர் கோபாலமேனன். இவரது பெயர் ராமச்சந்திரன். இரண்டையும் சேர்த்து மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்பதை எம்ஜிஆர் என, சினிமாவில் நடிப்பதற்கு வசதியாக, அவர் மாற்றிக் கொண்டார்.

அத்துடன் எம்ஜிஆர் தீவிர இந்து ஆவார். நாத்திக கொள்கை கொண்ட திராவிட இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்தாலும், அவர் இறை வழிபாடு கொண்டவராகவே விளங்கினார். வெளிப்படையாகவே, தன்னை ஆத்திகவாதி என்றே காட்டிக் கொண்டார். பின்னர், அஇஅதிமுக தொடங்கி, தமிழக முதல்வராக ஆட்சியமைத்து, டிசம்பர் 24, 1987 அன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதுதான் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு சுருக்கம்.

இதுதவிர, வெளிப்படையாகவே தன்னை ஆத்திகராக எம்ஜிஆர் காட்டிக் கொண்டார். திராவிட இயக்கத்தில் இருந்தும், ஒரு திராவிட கட்சியின் தலைவராக இருந்தும் அவர் கடவுள் வழிபாடு கொண்டவராக இருப்பது பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் கொள்ளவில்லை. மாறாக, இந்து மதத்தின் பெயரால் கொள்ளை அடிப்பவர்கள் இருக்கக்கூடாது என்றே விமர்சித்து வந்தார். பல முறை கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார். எம்ஜிஆரின் கடவுள் நம்பிக்கை பற்றி தி இந்து வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு நாடறிந்த நடிகர், அரசியல்வாதி, முன்னாள் முதல்வர் என்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான எம்ஜிஆர் பற்றி, திடீரென ஃபேஸ்புக்கில் இத்தகைய வதந்தியை ஒருவர் பகிர்ந்திருக்கிறார். எம்ஜிஆர் யார் என நிரூபிக்கப்பட்ட உரிய ஆதாரங்கள் உள்ள இந்த காலத்தில், மதத்தின் பெயரால் விஷமம் செய்து, வரலாற்றை திரிக்க, குறிப்பிட்ட நபர் நினைத்திருக்கிறார். இதுபோன்ற நச்சு சிந்தனை கொண்ட நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அதேசமயம், எம்ஜிஆர் பற்றி ஏராளமான புத்தகங்கள், பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசு கூட இதுபற்றிய பிரசுரங்களை வெளியிட்டுள்ளது. அதனை வாங்கி படித்து எம்ஜிஆர் யாரென தெரிந்துகொள்ளும்படி, இந்த பதிவை வெளியிட்ட நபரையும் கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது. இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை நமது வாசகர்கள் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:எம்ஜிஆர் ஒரு முஸ்லீம்; அவரது உண்மை பெயர் முகமது காஸ் ரஹ்மத்துல்லா: ஃபேஸ்புக் சர்ச்சை
Fact Check By: Parthiban SResult: False
