
‘’யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவிய கருணாநிதி,’’ என்று கூறி பகிரபப்டும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’ சீதைக்கு போட்டியாக கண்ணகி சிலை! விவேகானந்தர் மண்டபத்திற்கு நிகராக வள்ளுவர் சிலை! இந்து முன்னனியினர் மராட்டிய மன்னன் சிவாஜியிற்கு மார்கெட்டிங் செய்து கொண்டிருந்த போது ராஜராஜ சோழனுக்கு ஆயிரமாண்டு விழா. அம்பேத்கர் பெயரை வைப்பதை எதிர்த்து சிவசேனா போராடிய நேரத்தில் சென்னையில் அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி. யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூலகத்தை கட்டியது என எதிரிகளை தன் அறிவால் சண்டையிட்டு திருப்பி அடித்த தலைவன் #கலைஞர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இது மேலோட்டமாகப் பார்க்கும்போது, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைப் பட்டியல் போல தோன்றினாலும், சற்று யோசித்துப் பார்க்கையில், மிகப்பெரிய வரலாற்று ரீதியான பிழையையும் உள்ளடக்கியுள்ளதாக, தோன்றுகிறது.
ஆம். இந்த பதிவில் கூறியுள்ளதைப் போல, பூம்புகார் மற்றும் மெரீனா கடற்கரை பகுதிகளில் கண்ணகி சிலை நிறுவ நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி ஆவார்.
ஆனால், கன்னியாகுமரி பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கக் காரணமானவர் கருணாநிதி மட்டும் கிடையாது. இதில், எம்ஜிஆர் பங்களிப்பும் உண்டு.

விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குப் போட்டியாக திருவள்ளுவர் சிலை நிறுவப்படவில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நிறுவிய ஏக்நாத் ரானடே என்பவர்தான், திருவள்ளுவருக்கு அதே பகுதியில் சிலை ஒன்றை நிறுவலாம் என்ற பரிந்துரையை கருணாநிதியிடம் வழங்கியிருக்கிறார். அவரும் திட்டத்தை 1975ம் ஆண்டு அறிவித்த நிலையில், பிறகு எமர்ஜென்சி காரணமாக, பணிகள் முடங்கின.
இதையடுத்து, 1979ம் ஆண்டு, அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்த எம்ஜி ராமச்சந்திரன், பிரதமர் மொரார்ஜி தேசாய் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டி, திருவள்ளுவர் சிலை நிறுவும் பணியை தொடங்கி வைத்தனர். இதன் பிறகும் தடைபட்ட பணியை 1990 மற்றும் 1997 காலக்கட்டத்தில் ஆட்சி அமைத்த கருணாநிதி அரசு, இடைவிடாமல் மேற்கொண்டு முடித்து வைத்தது. இதுதான் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட வரலாறு.
இதற்கடுத்தப்படியாக, ராஜ ராஜ சோழனுக்கு 1000வது ஆண்டு விழா நடத்தியவர் கருணாநிதியா என்று பார்த்தால் இல்லை என்பதே பதில்.
ராஜ ராஜ சோழன் அரியணை ஏறிய 1000வது ஆண்டு விழாதான் நடந்துள்ளது. அதனை நடத்தியவர் எம்ஜி ராமச்சந்திரன் ஆவார். தஞ்சை பெரிய கோயிலின் 1000வது ஆண்டு விழாவைத்தான் கருணாநிதி நடத்திக் காட்டினார்.
OneIndia Tamil Link I Archived Link
அதாவது, ராஜ ராஜ சோழன் 1000வது ஆண்டு விழா (1985-86) வேறு; தஞ்சை பெரிய கோயில் 1000வது ஆண்டு விழா (2010-11) என்பது வேறு.
இதேபோல, அம்பேத்கர் சட்டக் கல்லூரி தொடங்கியவர் கருணாநிதி இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், சென்னையில் இந்த சட்டக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு 1891 ஆகும். அரசு சட்டக் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த நிலையில், 1990ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அம்பேத்கர் 100வது பிறந்த நாளை ஒட்டி, இதற்கு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இறுதியாக, யாழ்ப்பாணம் தேசிய நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களிலேயே அண்ணா நூலகம் அமைத்தவர் கருணாநிதி எனும் தகவல் தவறாகும்.
யாழ்ப்பாணம் தேசிய நூலகம், இலங்கை அரசியல் குழப்பத்தின் பேரில், தீ வைத்து எரிக்கப்பட்ட ஆண்டு 1981, ஜூன் 1ம் தேதி ஆகும்.
ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு 2010 ஆகும். திமுக ஆட்சிக்காலத்தில், கருணாநிதியின் முன்முயற்சியில்தான் இதுவும் கட்டப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், யாழ்ப்பாணம் தேசிய நூலகம் எரிக்கப்பட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகே, அண்ணா நூலகம் சென்னையில் நிறுவப்பட்டது. இதனை ‘வெறும் சில நாட்கள் இடைவெளியில்’ என்று சொல்வது மிகப்பெரும் வரலாற்றுப் பிழையாகும்.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உண்மையும், தவறான தகவலும் கலந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உண்மையும், பொய்யும் கலந்துள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவினாரா கருணாநிதி?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
