‘’புலம்பெயர் தமிழர்களிடம் நிதி உதவி கேட்டு சீமான் அறிக்கை,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3

இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரில் வெளியான அறிக்கை ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’புலம்பெயர் உறவுகளே, கட்சிப் பணத்தை கையாடல் செய்த நபர்கள் மீது விசாரணை நடைபெறுகிறது. இன்னும் சில காலத்திற்கு, என்னுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்துங்கள்,’’ என்று சீமான் எழுதியுள்ளதாக, அச்சிடப்பட்டுள்ளது.

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
நாம் தமிழர் கட்சியில் இருந்து கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி போன்ற முக்கிய நிர்வாகிகள் வெளியேறியுள்ளதால், அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில்தான் மேற்கண்ட அறிக்கை சீமான் பெயரில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த அறிக்கையை ஒருமுறை படித்துப்பார்த்தாலே தெளிவாக ஒரு கேள்வி எழுகிறது, ‘யாரேனும் இப்படி வெளிப்படையாக புலம்பெயர் தமிழர்களிடம் கட்சி நிதியை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்படி கேட்பார்களா?’.

ஆனால், சீமான் அப்படி கேட்பதாகக் கூறி இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், பலர் உண்மை போல இதனை நம்பி, காரசாரமாக விமர்சிப்பதையும் காண முடிகிறது.

இந்த அறிக்கையில் உள்ள ஃபாண்ட் நமது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தவே, இதனை fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். இது எடிட் செய்யப்பட்ட ஒன்றுதான் என உறுதியானது.

இதற்கடுத்தப்படியாக, Naam Tamilar Katchi அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடி சென்று தகவல் தேடினோம். ஆனால், இப்படி எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என தெரியவந்தது.

இதையடுத்து, சீமானின்(@SeemanOfficial) அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடியை பார்வையிட்டோம். அதிலும் எங்கேயும் இத்தகைய அறிக்கை காணப்படவில்லை.

எனவே, நமது ஆய்வை முடிக்கும் முன்பாக, இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது, ‘’கட்சியில் தற்போது குழப்பமான சூழல் நிலவுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு, எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். இந்த அறிக்கை எடிட் செய்யப்பட்ட ஒன்றாகும். இப்படி வெளிப்படையாக யாரிடமும் சீமான் நிதி உதவி கேட்டு அறிக்கை வெளியிடவில்லை,’’ எனக் குறிப்பிட்டனர்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) சீமான் இப்படி எந்த அறிக்கையும் சமீபத்தில் வெளியிடவில்லை. அவரது பெயரில் சிலர் எடிட் செய்து, இப்படியான போலி அறிக்கையை சுற்றில் விட்டுள்ளனர். அதுவே சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

2) நாம் தமிழர் கட்சிக்குள் நிலவும் குழப்பம் காரணமாக, இந்த அறிக்கையை பலர் உண்மை என நம்ப தொடங்கியுள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:புலம்பெயர் தமிழர்களிடம் நிதி கேட்டு சீமான் அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer

Result: False