
உலக அளவில் கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் முதலிடத்தை மு.க.ஸ்டாலின் பிடித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய நியூஸ்18 தமிழ்நாடு நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலிடத்தைப் பிடித்தார் ஸ்டாலின். உலக அளவில் கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் முதலிடத்தைப் பிடித்தார் ஸ்டாலின் – கருத்துக்கணிப்பில் தகவல்” என்று உள்ளது.
இந்த நியூஸ் கார்டை K V Sabareeswaran என்பவர் 2020 பிப்ரவரி 24ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்பாக பல பொய்யான நியூஸ் கார்டுகளை அவ்வப்போது குறிப்பிட்ட கட்சியினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பலராலும் ஷேர் செய்யப்படும் இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர், பவர்ஃபுல் தலைவர், பணக்கார தலைவர் என்று நிறைய பட்டியல்கள் வெளியாகி உள்ளன. மிகவும் கிண்டலுக்கு ஆளாகும் தலைவர் என்று இதுவரை எந்த ஒரு பட்டியலும் வந்ததாக தெரியவில்லை. அதிலும், டிரம்ப், புதின் என்று உலக அளவில் அனைவருக்கும் தெரிந்த தலைவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, தமிழகத்தில் மட்டும்…
அதிகபட்சம் இந்தியாவில் ஓரளவுக்கு அறியப்படும் மு.க.ஸ்டாலின் பெயர் பட்டியலில் இடம் பெற்றது என்பது நம்பும்படி இல்லை. அது போல ஏதாவது பட்டியல் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
நியூஸ் 18 தமிழ் நாடு இணையம், சோஷியல் மீடியா பக்கத்தில் இதுதொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இந்த நியூஸ் கார்டு அசலானதுதானா என்று நியூஸ் 18 தமிழ் வழக்கமாக வெளியிடும் நியூஸ் கார்டை வைத்து ஆய்வு செய்தோம்.

Search Link 1 | Search Link 2 |
1) நியூஸ் 18 தமிழ் நாடு தான் வெளியிடும் ஒவ்வொரு நியூஸ் கார்டிலும் தேதியை பளிச் எனத் தெரியும் வகையில் வைத்திருந்தது. ஆனால், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த நியூஸ் கார்டில் அது மிஸ்ஸிங்.
2) நியூஸ் 18 வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்டும், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள தமிழ் ஃபாண்டும் வித்தியாசமாக இருந்தது.
3) நியூஸ் 18 தமிழில் பின்னணியில் லோகோ தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இந்த நியூஸ் கார்டில் லோகோ இல்லை. கருத்து உள்ள பகுதி மட்டும் எடிட் செய்து சேர்க்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இந்த நியூஸ் கார்டை நியூஸ் 18 தமிழ்நாடு சமூக ஊடகப் பிரிவுக்கு அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அதற்கு அவர்கள் இது போலியானது என்று உறுதி செய்தனர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “உலக அளவில் கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் முதலிடத்தைப் பிடித்தார் ஸ்டாலின்” என்று நியூஸ் 18 தமிழ் நாடு நியூஸ் கார்டு வெளியிட்டது போன்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கேலிக்கு உள்ளாகும் தலைவர்களில் ஸ்டாலின் முதலிடம் என்று நியூஸ் 18 செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
