டிரம்ப் கையில் இந்தியா – அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்: உண்மை என்ன?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை காட்டுவது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

அமெரிக்க அதிபர் டிரம்ப் டி-ஷர்ட் ஒன்றை காட்டுகிறார். அதில் இந்தியா மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகளுடன், “India & America Needs Jesus” என்று அச்சிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, கிறித்தவ விசுவாச வீடியோக்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் பிப்ரவரி 26, 2020 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்க அதிபர் இந்தியா வந்து சென்றுள்ள நிலையில் இந்த புகைப்படம் ஷேர் செய்யப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது. முன்பு இதேபோல் வேறு ஒரு படம் வைரல் ஆனது. அது தவறானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தது. தற்போது மீண்டும் அதேபோல், அமெரிக்க அதிபர் டிரம்ப், ” இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இயேசு தேவை” என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற பதிவை பரப்பி வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த படத்தைப் பயன்படுத்தி பலரும் பல வதந்திகளைப் பரவி வருவது தெரிந்தது. பெரும்பாலும் சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருவதால் எது உண்மையானது, எது போலி என்று கண்டறிவது சிக்கலாக இருந்தது.

ஏதாவது ஊடகம் இந்த படத்தை வெளியிட்டுள்ளதாக என்று தொடர்ந்து தேடினோம். அப்போது இங்கிலாந்திலிருந்து வெளிவரும் தி சன் என்ற ஊடகம் இந்த படத்தை வெளியிட்டிருந்தது தெரிந்தது.

Search Link

இந்த புகைப்படம் அவர்கள் பிரத்தியேக பேட்டியின்போது எடுத்தது. அதனால் மற்ற ஊடகங்கள் எதுவும் இந்த புகைப்படத்தை வெளியிடவில்லை. அந்த புகைப்படத்தைப் பார்த்தோம். அதில் வெள்ளை நிற டிஷர்ட்டில் இங்கிலாந்து கால்பந்து அணியின் சின்னம் பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது. மற்றபடி அதில் எந்த வாசகமும் இடம் பெறவில்லை.

thesun.co.ukArchived Link

தி சன் இந்த புகைப்படம் தொடர்பான அடிக்குறிப்பில், “அதிபர் டிரம்ப் தன்னுடைய டிரேட் மார்க் புன்னகையோடு எங்களுடைய புகைப்பட கலைஞருக்கு டி ஷர்ட்டை தூக்கிப் பிடித்தபடி போஸ் கொடுத்தார். புகைப்படம்: பால் எட்வர்ட்ஸ், தி சன்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம், அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி ஷர்ட்டை காண்பிக்கிறார் என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:டிரம்ப் கையில் இந்தியா – அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்: உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •