
‘’படேல் சிலைக்கு பல ஆயிரம் கோடி ரூபாயில் ரெயின் கோட் அணிவிக்க மோடி அரசு திட்டம்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link
Lakshmi Velpandi என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை, ஜூலை 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், சர்தார் படேல் சிலைக்கு ரெயின் கோட்டது போல ஒரு நியூஸ்பேப்பர் துண்டு காட்டப்பட்டுள்ளது. அதன் மேலே, ‘’பிரதமர் மோடியின் அடுத்ததிட்டம்..!! படேல் சிலைக்கு 1000 கோடியில் மழை கோட்டு..!!!’’, என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், பகிரப்பட்டுள்ள ஒரு நியூஸ்பேப்பர் துண்டு, குஜராத் மொழியில் வெளிவரும் செய்தித்தாள் ஒன்றைச் சேர்ந்ததாகும். இதுபற்றி நமது குஜராத்தி பிரிவில் விசாரித்தபோது, ‘’குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் படேல் ராட்சத சிலையின் பார்வையாளர் மாடம், மழைநீர் ஒழுகும் அளவுக்கு மோசமாக உள்ளது. இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க, பேசாமல் ரெயின் கோட் போட்டுவிடலாம்,’’ என்று அந்த செய்தியில் கேலி செய்து, எழுதப்பட்டுள்ளதாக, தெரிவித்தனர். அத்துடன், அந்த நியூஸ்பேப்பர் செய்தியில் உள்ள புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதாகும். அதனை ஒரு தொடர்புக்காக, கிண்டல் தொனியில் பயன்படுத்தியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, விளையாட்டிற்காக பகிரப்பட்ட ஒரு செய்தியை உண்மை என தவறாக சித்தரித்து, நமது ஃபேஸ்புக் பதிவர் பகிர்ந்துள்ளார். இது மிகவும் தவறான செயலாகும். உண்மையான சிலை எப்போதும்போலவே உள்ளது. அதாவது, சர்தார் படேல் சிலையின் உள்ளேயே அதன் நெஞ்சு பகுதியில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் உள்ளேயே இதற்கான லிஃப்ட், படிக்கட்டு வசதிகள் உள்ளன. அதன்படி, மார்பு பகுதியில் உள்ள பார்வையாளர் மாடத்தில்தான் மழை பெய்து தண்ணீர் ஒழுகுவதாக, அம்புக்குறியிட்டு, அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். மற்றபடி, செய்தியின் சுவாரசியத்திற்காக, சிலைக்கு ரெயின் கோட் அணிவிப்பது போல, ஃபோட்டோஷாப் செய்து பகிர்ந்துள்ளனர். இதுதான் மேற்கண்ட செய்தியில் உள்ள உண்மையாகும்.
மற்றபடி, படேல் சிலைக்கு யாரும் ரெயின் கோட் அணிவிக்க திட்டமிடவில்லை. சிலை வழக்கம்போலவே உள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, குஜராத்திய செய்தித்தாள் வெளியிட்ட செய்தியை தவறாகச் சித்தரித்து, படேல் சிலைக்கு ரெயின் கோட் போட மோடி திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:படேல் சிலைக்கு பல கோடி ரூபாயில் ரெயின் கோட் அணிவிக்க மோடி அரசு திட்டமா?
Fact Check By: Pankaj IyerResult: False
