“மழை மேகத்தை உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்த நாசா” –ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் சர்வ தேசம்

செயற்கையாக மழை பொழிவை ஏற்படுத்த மழை மேகத்தை உற்பத்தி செய்யும் கருவியை நாசா கண்டுபிடித்துள்ளதாக ஒரு வீடியோ, சமூக ஊடகங்களில் வைரல் ஆக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

NASA 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

59 விநாடிகள் ஓடும் பி.பி.சி வெளியிட்ட சிறிய வீடியோவை பதிவேற்றியுள்ளனர். வீடியோவின் தொடக்கத்தில் பெரிய பெரிய விண்வெளி ஆய்வுக் கூட கட்டிடத்தில் இருந்து வெண் புகை வருவதைக் காட்டுகின்றனர். கட்டிடத்தின் மீது நாசா என்று எழுப்பட்டுள்ளது. நிருபர் ஒருவர் கட்டிடத்தில் வரும் புகையைப் பற்றிப் பேசுகிறார். அந்த புகை வானத்தில் மேகம் போல் திரண்டு நிற்கிறது. சிறிது நேரத்தில் மழை பெய்கிறது… “மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது” என்று அந்த நிருபர் கூறுகிறார். மற்றபடி, அது மழை மேகத்தை உண்டாக்கும் ஜெனரேட்டர் என்று எல்லாம் எதையும் கூறவில்லை.

இந்த பதிவை, C C R Rajendran என்பவர் 2018 அக்டோபர் 11ம் தேதி வெளியிட்டுள்ளார். இதே போன்ற பதிவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் வெண் புகை கிளம்புகிறது, சிறிது நேரத்தில் மழை பொழிகிறது. இதைப் பார்க்க செயற்கை மழையை உண்டாக்கும் கருவி போலவே அது தெரிந்தது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்து, நாசா கண்டுபிடித்த செயற்கை மழை பொழிய வைக்கும் ஜெனரேட்டர் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது நிறையச் செய்திகள், ஃபேக்ட் செக் கட்டுரைகள் நமக்கு கிடைத்தன.

NASA 3.png

அப்படி ஒரு இயந்திரம் நாசாவிடம் இல்லவே இல்லை என்று ஃபோர்ப்ஸ் வெளியிட்ட செய்தியும் கிடைத்தது. அந்த செய்தியைப் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய தேடலில், சமீபத்தில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்திருந்திருக்கிறார். அதில், மழை பெய்ய வைக்கும் ஜெனரேட்டரை நாசா கண்டுபிடித்துள்ளதாக ஒரு பகிர்ந்திருந்த ட்வீட்டை ரீட்வீட் செய்திருந்தார். அதில், அதுபோல ஒன்று இந்தியாவுக்கும் இப்போதே வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் அந்த குறிப்பிட்ட வீடியோ மீண்டும் வைரல் ஆக பரவி வருவது தெரிந்தது.

Archived Link

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவு (www.factcrescendo.com) கூட, அமிதாப்பச்சன் ட்வீட்டைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வைரலான இந்த விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியது தெரிந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற வீடியோவின் அசலை தேடினோம். அப்போது, 2010ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி Top Gear என்ற யூடியூப் பக்கம் வெளியிட்ட வீடியோ ஒன்று கிடைத்தது. 2.52 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் இருந்து எடுத்து ஒரு நிமிடம் ஓடக்கூடியது போன்ற வீடியோவை தயாரித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

மேற்கண்ட அந்த யூடியூப் வீடியோவில், “”மிசிசிபியில் உள்ளா நாசா ஸ்பேஸ் ஷட்டல் சாலிட் ராக்கெட் பூஸ்டர் ஆய்வு மையத்துக்கு ஜெர்மி கிளார்க்சன் சென்றார். அங்கு அரை மில்லியன் காலன் எரிபொருளைப் பயன்படுத்தி, உந்து விசையை ஏற்படுத்தி எப்படி விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புகிறார்கள் என்பதைப் பார்த்தார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

NASA 4.png

இந்த வீடியோ தொடர்பாக ஏபி செய்தி நிறுவனத்தின் உண்மை கண்டறியும் பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது நமக்குக் கிடைத்தது. மேற்கண்ட வீடியோ குறித்து நாசாவை தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அதற்கு நாசா செய்திப் பிரிவு தலைவர் Valerie Buckingham  “இந்த வீடியோ ஆர்எஸ்68 என்ற கமர்ஷியல் இன்ஜின் பரிசோதனையின்போது பிபிசி-யால் எடுக்கப்பட்டது. இந்த ராக்கெட் இன்ஜினில் திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்சிஜன் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை எரிபொருளாகப் பயன்படும்போது அது நீராவி புகை மண்டலத்தை உருவாக்குகிறது. நீராவி குளிரும்போது தண்ணீராக மாறுகிறது. தண்ணீர் கீழே வருவது மழை போல தெரிகிறது. பரிசோதனை நேரத்தில் அந்த பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலை, காற்றின் ஈரப்பதத்தைப் பொருத்து மழையாகப் பொழிவது அமையும். செயற்கை மழையைப் பொழிய வைப்பது நாசாவின் நோக்கம் இல்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில் அமிதாப் பச்சன் ட்வீட்டைத் தொடர்ந்து இந்தியா டுடே, பூம் உள்ளிட்ட பலரும் உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியது தெரிந்தது. அமிதாப்பச்சன் செய்தி தொடர்பாக மாலை மலர் வெளியிட்ட செய்தியும் நமக்குக் கிடைத்தது. அதில், இந்த ஜெனரேட்டர் மழையை உண்டாக்கும் கருவி இல்லை… ராக்கெட் இன்ஜின் பரிசோதனை என்று குறிப்பிட்டிருந்தனர்.

நம்முடைய ஆய்வில்,

மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோவின் அசல் வீடியோ கிடைத்துள்ளது. அதில் ராக்கெட் இயந்திர பரிசோதனை என்றே குறிப்பிட்டுள்ளனர்.

வீடியோவை எடிட் செய்து ஒரு நிமிடமாக மாற்றியுள்ளது உறுதியாகி உள்ளது.

நாசாவிடமிருந்து ஏபி செய்தி நிறுவனம் பெற்ற விளக்கம் கிடைத்துள்ளது.

ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி, இந்தியா டுடே, பூம் உள்ளிட்டவை வெளியிட்ட உண்மை கண்டறியும் ஆய்வுகள் கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“மழை மேகத்தை உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்த நாசா” –ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False