
‘’தமிழன் என்பதால் இஸ்ரோ சிவனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மோடி ரத்து செய்துவிட்டார்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

குறிஞ்சி நாதன் என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 25, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், இஸ்ரோ சிவன் பற்றி நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை பதிவிட்டு, தமிழன் என்பதாலும், அவர் மோடி பெயரை சொல்லி நன்றி கூறவில்லை என்பதாலும் உடனே இஸ்ரோ சிவனுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சந்திரயான் 2 விண்கலத்தை, வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதற்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதையொட்டி, இஸ்ரோ தலைவர் சிவன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இதன்போது தமிழிலும் அவர் பேசினார். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்ட நிலையில், அடுத்த 2 நாளில், இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்தே, அவர் தமிழன் என்பதால் பழிவாங்கப்பட்டதாகக் கூறி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
உண்மையில், இஸ்ரோ சிவன் மட்டுமல்ல, நிறைய பேருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற்றும், அதில், சில திருத்தங்களை மேற்கொண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி, ராஜ்ய சபா எம்பி பிரதாப் சிங் பாஜ்வா, உத்தரப் பிரதேச அமைச்சர் பிரிஜேஷ் பதாக், இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பிரிவு (சிஎஸ்ஐஎஃப்) வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பதால் இம்முடிவு மேற்கொள்ளப்படுவதாக, உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
உயர் பதவியில் உள்ளவர்களுக்கும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள முக்கிய நபர்களுக்கும், பல்வேறு தர நிலைகளில் சிறப்பு பாதுகாப்பு வழங்குவதும், பின்னர் தேவை இல்லாதபோது, அதனை வாபஸ் பெறுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருத்தம் செய்வதும் வழக்கமான நடவடிக்கைதான். இவர்கள் குறிப்பிடுவதுபோல, தமிழர் என்பதால் மட்டுமே இஸ்ரோ சிவனுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வாபஸ் பெறப்படவில்லை. சொல்லப் போனால் சிவனுக்கு கடந்த 2018ம் ஆண்டுதான் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அப்போதும் மோடிதான் பிரதமராக இருந்தார். இதுதொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
நாடு முழுவதும் இஸ்ரோ தலைவர் சிவன் உள்பட 1,300 விஐபிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன்மூலமாக, விஐபி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த வீரர்களை தேச பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியும் என உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தி இந்து வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நடப்பு சூழலின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் இஸ்ரோ சிவன் உள்ளிட்டோருககு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது. இதற்கு, தமிழர், தமிழர் அல்லாதவர் என்ற வேறுபாடு காரணமில்லை. இது வழக்கமான நடவடிக்கைதான். இதனை தனிப்பட்ட அரசியல் நோக்கத்திற்காக, பொதுமக்களை குழப்பும் வகையில் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளனர்.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் தகவலில் நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவலில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழன் என்பதால் இஸ்ரோ சிவனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மோடி ரத்து செய்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: Mixture
