
83 வயதான இஸ்லாமியர் ஒருவர் 16 வயதான சிறுமியை திருமணம் செய்துள்ளார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
முதியவரும் இளம் பெண்ணும் மாலையும் கழுத்துமாக இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “16க்கும் 83க்கும் கல்யாணம். அமைதி மார்க்கத்தில் மட்டுமே சாத்தியம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Erachakulam Kaliyappan என்பவர் 2020 மார்ச் 9 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த படம் அசல் போலத் தெரியவில்லை. முதியவர் தலையை வெட்டி வொட்டி போட்டோஷாப் ஜாலம் செய்தது போல உள்ளது. எனவே, இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

Search Link | freesami.com | Archived Link |
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 60 வயதானவரை 15 வயதான பெண் திருமணம் செய்துள்ளதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரும் தகவல் நமக்கு கிடைத்தது. உண்மையில் அவர் வயது 60 தானா, 15 வயது பெண்ணை திருமணம் செய்து வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முடியுமா, மைனர் பெண்ணை திருமணம் செய்தால் போலீஸ் விடுமா என்று பல்வேறு சந்தேகங்கள் நமக்கு எழுந்தன. இருப்பினும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியானது.

இருப்பினும் 15 வயது சிறுமியை, 60 வயது நபர் திருமணம் செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளதால் அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். நம்பகமான செய்தி ஊடகங்களில் செய்தி ஏதும் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், எதிலும் இந்த செய்தி வெளியாகவில்லை. தொடர்ந்து தேடியபோது பப்ளிக் டி.வி என்ற மலையாள ஊடகத்தில் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. அதில் அந்த நபர் வயது பற்றிக் குறிப்பிடவில்லை. இருப்பினும் கர்நாடக மாநிலம் மங்களுருவில் நிகழ்ந்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தனர்.

daijiworld.com | Archived Link 1 |
publictv.in | Archived Link 2 |
வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, இந்த பெண் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி தவறு என்று இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில், இந்த பெண் ஐதராபாத்தில் வசிப்பதாகவும், இந்த படத்துடன் ஒரு சில விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று வெளியானது என்றும், அதில் இந்த பெண்ணை காப்பாற்றுங்கள் என்று கூறப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இந்த படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இதுபற்றி வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு, அந்த பெண்ணை காப்பாற்றும்படி பலரும் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அந்த பெண் மற்றும் அவரது தந்தையை போலீசார் வலைவீசித் தேடி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த கட்டுரையில் இடம் பெற்றிருந்த சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடியபோது வீடியோ ஒன்று கிடைத்தது. அதில், படத்தில் உள்ள பெண் ஐதராபாத் போலீசில் புகார் செய்தார் என்று இருந்தது. இந்தியில் இருந்ததால் நம்முடைய இந்தி ஃபேக்ட் கிரஸண்டோவுக்கு அந்த வீடியோவை அனுப்பி என்ன சொல்கிறார்கள் என்று கேட்டோம்.
அப்போது அவர்கள், சமூக ஊடகத்தில் வைரலாக பகிரப்படும் பெண்ணின் படம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்க வந்திருப்பதாக வீடியோ தொடங்குகிறது.
அந்த பெண் பேசும்போது, “என்னுடைய பெயர் சரிதா பேகம், ஐதராபாத்தில் இருக்கிறேன். ஒருவாரமாக என்னுடைய படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதாக என்னிடம் தெரிவித்தனர். அந்த பதிவில் என்னைப் பற்றி எழுதியிருப்பது எல்லாம் முழுக்க முழுக்க தவறானவை. எனக்கும் அந்த நபருக்கும் திருமணம் நிச்சயம் மட்டுமே நடந்தது. ஆனால், அதுவும் ஒரு வாரத்தில் முறிந்துவிட்டது. அதனால் எங்கள் திருமணம் நின்றுவிட்டது. அதன் பிறகு வேறு ஒருவருடன் எனக்குத் திருமணம் முடிந்துவிட்டது. தற்போது ஐதராபாத்தில் கணவருடன் வசிக்கிறேன். அதனால் என்னைப் பற்றி அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்க வந்தேன்” என்றார்.
அவருடன் வந்தவர் கூறுகையில், ‘’படத்தில் இருப்பவர் நைஜீரியா நபர் இல்லை… அவர் சூடானைச் சேர்ந்தவர். வயது 60 என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர்” என்றார்.
நம்முடைய ஆய்வில்,
அசல் படம் கிடைத்துள்ளது. அதில் வயதான தாத்தா இல்லை, ஆப்ரிக்காவை சேர்ந்த நடுத்தர வயது நபர் இருந்தார்.
இந்த படத்தில் உள்ளவர் ஐதராபாத்தில் இருப்பதும், தன்னைப் பற்றி குறிப்பிட்ட தகவல் அனைத்தும் தவறானது என்றும் அவர் அளித்த பேட்டி கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் 16 வயதான பெண்ணை மணந்த 83 வயது பெரியவர் என்று பகிரப்படும் படம் மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்!- வைரல் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False

தடங்களுக்கு வருந்துகிறோம்.. இந்த புகைப்படம் பேஸ்புக்கில் எடுத்தே நான் உபயோகப்படுத்தினேன். ஒருவாரம்.. பத்துநாள்..ஒருமாதம்.. இரண்டு மாதம் என ஒப்பந்தத்தில் ஹைதராபாத்.. லக்னோ.. மும்பை.. போன்ற நகரங்களில் அரபு தேசத்தவர்க்கு இஸ்லாமியர்கள் பெண்களை கொடுப்பதும் பின் தலாக் பெறுவதும் நடைமுறையே.. இலங்கை.. இந்தியா.. பாகிஸ்தான்.. பங்களாதேஸ்.. ஒரு விலையும்.. இந்தோனேசியா.. தாய்லாந்து.. மலேசியாவில் ஒரு விலையும்.. ஜோர்டான்.. சிரியா.. பாலஸ்தீனம்.. லெபனான் போன்ற நாடுகளில் ஒரு விலையும் உண்டு. இதை சுருக்கமாக சொல்லுவதென்றால் விபச்சாரம் என்று ஆகாமல் பண மதிப்பின் அடிப்படையில் ஒப்பந்தத்தில் வாழ்ந்து பிரிவது… இன்றும் நடைமுறையில் உள்ளது. திருமணம் என்பது பணக்கார அரபு நாட்டில் அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் ஏழை நாடுகளில் குறைந்த வயது பெண்களை தேடி வருகிறார்கள்.