கையடக்க டிரோன் கண்டுபிடித்த அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி?- முழு விவரம் இதோ!

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International தொழில்நுட்பம்

கையடக்க தானியங்கி டிரோனை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க வாழ் இளம் விஞ்ஞானி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் வரும் அவர் யார் என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

கையடக்க, நம்முடைய கையை நகர்த்துவதன் மூலம் தானாக செயல்படும் மிகச்சிறிய டிரோன் கருவியின் அறிமுக வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்கவாழ் இந்திய இளம் விஞ்ஞானியின் சிறந்த கண்டுபிடிப்பு பாருங்க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Pyaree Priyan என்பவர் 2020 செப்டம்பர் 9ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் உள்ளவர் அமெரிக்க வாழ் இந்திய இளம் விஞ்ஞானி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் யார், அவர் பெயர் என்ன என்று எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, அவரைப் பற்றிய ஆய்வுகளை தொடங்கினோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இதன் அசல் வீடியோ மற்றும் செய்தி நமக்கு கிடைத்தன. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனில் நடந்த நிகழ்ச்சியில் பிரபல கேமரா டிரோன் தயாரிப்பு நிறுவனமான டிஜேஐ நிறுவனத்தின் மைக்கேல் பெர்ரி தங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கையடக்க டிரோனை அறிமுகம் செய்தார் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். 

inverse.comArchived Link

சீனாவைச் சேர்ந்த டிஜேஐ நிறுவனத்தின் வட அமெரிக்காவுக்கான நிர்வாக இயக்குநராக மைக்கேல் பெர்ரி பணியாற்றி வந்தது தெரியவந்தது. அந்த கட்டுரையைப் படித்துப் பார்த்தோம். அதில், அந்த டிரோனின் பெயர் ஸ்பார்க் என்றும், டிஜேஐ நிறுவனத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் விலை (2017ம் ஆண்டில்) 499 அமெரிக்க டாலர் என்றும், ஆக்சசரிஸ் எல்லாவற்றையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் 699 அமெரிக்க டாலர் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இந்த டிரோனை இவர் உருவாக்கவில்லை என்பதும், அவருடைய நிறுவனம் தயாரித்த டிரோனை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியதும் உறுதியாகிறது.

aecnext.comArchived Link

அவர் இந்தியரா என்று தேடிப் பார்த்தோம். linkedin.com தளத்தில் அவரைப் பற்றித் தேடினோம். அப்போது அவரது முழு பெயர் மைக்கேல் பாட்ரிக் பெர்ரி என்பதும் அமெரிக்காவில் சீனா மற்றும் அமெரிக்காவில் படித்து வளர்ந்ததாக தெரிந்தது. தன்னை டிரோன் தயாரிப்பாளர் என்று அவர் கூறவில்லை. டிரோன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுபவர் என்றே அவர் கூறியுள்ளார்.

linkedin.comArchived Link

மேலும், அவர் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் பி.ஏ சீன மொழி படித்திருப்பதும், அதைத் தொடர்ந்து சீன பல்கலைக் கழகங்களில் படித்திருப்பதும் தெரிந்தது. அவருக்கு ஆங்கிலம், சீன மொழிகள் மட்டுமே தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியர் என்று கூறுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் பார்க்க இந்தியர் போலவும் இல்லை. 

இதன் மூலம் இந்த டிரோனை கண்டுபிடித்தது இவர் இல்லை என்பதும், தான் பணி புரிந்த நிறுவனத்தின் தயாரிப்பை அவர் அறிமுகம் செய்ததும் உறுதியாகிறது. மேலும் அவர் இந்தியர் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அவருடைய வெளிப்புற தோற்றம் முதலானவை அவர் அமெரிக்கர் என்பதையே உறுதி செய்கின்றன.

இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கையடக்க டிரோன் கண்டுபிடித்த அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி?- முழு விவரம் இதோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False