தமிழக பா.ஜ.க தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதை கண்டித்து எஸ்.வி.சேகர் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முருகன் படம் மற்றும் எஸ்.வி.சேகர் ட்வீட் படத்தை இணைத்துப் பதிவிட்டுள்ளனர். எஸ்.வி.சேகர் ட்வீட்டில், "கன்னக்கோல் கொள்ளைக்காரர்கள் எல்லாம் தேசியக் கட்சியின் மாநிலத் தலைமை பொறுப்பிலா? இந்து மதத்தை திறந்துவிட்டது போதாதா? கட்சியும் சூத்திரர்களின் கடை சரக்கா?" என்று உள்ளது.

இந்த பதிவை, புதுகை அப்துல் ஜப்பார் என்பவர் 2020 மார்ச் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

எஸ்.வி.சேகர் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களைக் கூறுபவர் என்றாலும் இவ்வளவு வெளிப்படையாக விமர்சிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. உண்மையில் எஸ்.வி.சேகர் இந்த பதிவை வெளியிட்டுள்ளாரா என்று அறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். 13ம் தேதி தமிழக பா.ஜ.க புதிய தலைவர் முருகனுக்கு வாழ்த்து கூறியிருந்தார்.

Archived Link

தொடர்ந்து பார்த்தபோது, மார்ச் 12ம் தேதி "ஜாதி வெறியை தூண்டும் ஒரு மூன்றாம்தரப்பொறுக்கி வேலையை சமூக வலைத்தளத்தில் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷ்னருக்கு புகார் கடிதம்" என்று தன்னுடைய முன்னாள் எம்.எல்.ஏ லெட்டர்பேடில் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் ஒன்றை எழுதியதன் படத்தை பகிர்ந்திருந்தார்.

அந்த கடிதத்தில், "என்னுடைய ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து தமிழக பா.ஜ.க புதிய தலைவர் முருகன் நியமனத்தை விமர்சித்ததாக போலி பதிவின் புகைப்படம் வாட்ஸ் அப்பில் எனக்கு வந்தது. சமூகத்தில் சாதி மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலியான ட்வீட் பதிவை உருவாக்கிய நபர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Archived Link

இதன் மூலம் எஸ்.வி.சேகர் சர்ச்சையான கருத்தை கூறியதாக பகிரப்படும் பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதை விமர்சித்து எஸ்.வி.சேகர் ட்வீட் செய்தார் என்று பகிரப்படும் பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழக பாஜக தலைவர் நியமனத்தை எதிர்த்து எஸ்.வி.சேகர் ட்வீட் செய்தாரா?- வைரல் பதிவு

Fact Check By: Chendur Pandian

Result: False