இஸ்லாமியர் தெருவிற்குள் நுழைந்ததால் இந்து சன்னியாசி தாக்கப்பட்டாரா?

குற்றம் | Crime சமூக ஊடகம் | Social

இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருவில் சென்ற இந்து சன்னியாசி ஒருவர் தாக்கப்பட்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

முஸ்லிம் தெருவில் இந்து சாமியார்கள் நுழையக்கூடாதா..???

#இது_இந்தியாவா,,,, இல்லை #பாகிஸ்தானா..???

NAGA SADHU 2.png

Archived link

உடல் முழுக்க விபூதி பூசியது போன்று உள்ள ஒருவரை சிலர் சுற்றி நின்று தாக்குகின்றனர். அந்த நபர் கையெடுத்துக் கும்பிடும் படமும் உள்ளது. படத்தின் மேல், “ஒரு இஸ்லாமியனின் மதவெறி. ஹிந்து சன்னியாசி அவன் ஏரியாவில் வந்ததுக்காக விரட்டி விரட்டி அடிக்கிறான். இதைப் பார்த்தாவது திருந்துங்கடா” என்று கூறப்பட்டுள்ளது. விபூதி பூசிய நபர் இந்து சன்னியாசி என்றும் அவரை இஸ்லாமியர்கள் அடிப்பது போன்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sakthivel Desinghraj Desinghraj மே 11ம் தேதி பகிர்ந்துள்ளார். இந்து சன்னியாசி ஒருவரை இஸ்லாமியர்கள் அடிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளதால் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தில் இருப்பவர் இந்து சன்னியாசி போலவே உள்ளார். அடிப்பவர்களில் ஒருவர் தாடி வைத்துள்ளதால் அவர் இஸ்லாமியர் என்று கருதி பலரும் இந்த தகவல் உண்மை என்று பகிர்ந்துள்ளனர். இந்த படம் மற்றும் செய்தியின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய, படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

NAGA SADHU 3.png
NAGA SADHU 4.png

நம்முடைய தேடலில், உடலில் விபூதி பூசப்பட்டது போன்ற நபர் தாக்கப்படும் படங்கள், வீடியோ மற்றும் அது தொடர்பான பல செய்திகள் கிடைத்தன. பல பதிவுகள் இந்தி மற்றும் வேறு மொழியிலிருந்தன. அவற்றை டிரான்ஸ்லேஷன் செய்து பார்த்தபோது நாகா சாது தாக்கப்பட்டார் என்று பரவும் வதந்தி பொய் என்று இருந்தது. அது தொடர்பான செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாகா சாது தாக்கப்பட்டார் என்று கூகுளில் தேடியபோது பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. நம்முடைய factcrescendo.com உள்ளிட்ட பலரும் இந்த படம் தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியது தெரியவந்தது.

NAGA SADHU 5.png

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியில், “டேராடூனில் நாகா சாது தாக்கப்பட்டார் என்று இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது. இது குறித்து டேராடூன் போலீசில் விசாரித்தபோது, 2018 ஆகஸ்ட் 24ம் தேதி டேராடூன் படேல் நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. படத்தில் இருக்கும் நபர் நாகா சாது இல்லை,’’ என்று தெரிவித்துள்ளனர்.

செய்தி 1
செய்தி 2

மேலும், டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் டேராடூன் போலீஸ் எஸ்.எஸ்.பி இந்தியில் வெளியிட்ட ட்விட்டையும் இணைந்திருந்தனர். அதில், “படத்தில் இருக்கும் நபர் பெயர் சுஷில் நாத். இவர் ஹரியானா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்த போதை பழக்கத்துக்கு அடிமையான ஒரு பிச்சைக்காரர். பாம்பு பிடிக்கும் தொழிலை செய்துவந்தார். சம்பவத்தன்று டேராடூனில், ஒரு வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அந்த பெண்ணின் சகோதரன் ஓடிவந்து, சுஷில்நாத்தை அடித்துள்ளார். அருகில் உள்ளவர்களும் சுஷில்நாத்தை அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவர் மீது இந்த இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறப்பட்டு இருந்தது. டேராடூன் எஸ்.எஸ்.பி-யின் ட்வீட்…

Archived link

Factcrescendo ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்த உண்மை கண்டறியும் சோதனையில், இந்த நபர் நாகா சாது இல்லை. இவர் ஒரு பாம்பு பிடிக்கும் நபர். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். அவர் மீது டேராடூன் படேல் நகர்போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும் அந்த நபரை பலரும் அடிப்பது தொடர்பான வீடியோவும் அந்த நபர் மீதான முதல் தகவல் அறிக்கை எண்ணும் கூட நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ உண்மை கண்டறியும் சோதனை முடிவில் கொடுக்கப்பட்டு இருந்தது. டேராடூன் போலீசில் நேரடியாக பேசி தகவலைப் பெற்றுள்ளனர்.

புகார் அளித்த எஸ். குமார்  ஒரு இந்து. குற்றம்சாட்டப்பட்ட நபர் சுஷில்நாத் இந்து. டேராடூன் படேல் நகர் போலீஸ் நிலையத்தில், ஆகஸ்ட் 24, 2018 அன்று இந்த புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் எண் 0351. சுஷில் நாத் மீது சிஆர் 351/18 செக்‌ஷன் 354பி, 504, 374, 511 இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது உள்பட பல ஆதாரங்களை ஃபேக்ட் கிரஸண்டோ அளித்திருந்தது. வீடியோ பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

இந்த வீடியோவில் காவி உடை அணிந்த பெண்கள் சிலரும் நாகா சாது என்று கூறப்படும் சுஷில் நாத்தை அடிப்பதை காணலாம். இஸ்லாமியர்கள் மட்டுமல்ல எல்லோரும் சேர்ந்துதான் சுஷில்நாத்தை தாக்கியுள்ளனர். பொது மக்களிடமிருந்து சுஷில்நாத்தை மீட்க போலீசார் படும்பாட்டை இந்த வீடியோவில் காணலாம்.

நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில்,

1) படத்தில் இருக்கும் நபர் நாகா சாது இல்லை. இவர் போதை பழக்கத்துக்கு அடிமையான பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்தவர்.

2) இஸ்லாமியர் வசிக்கும் பகுதிக்குள் சென்றதால் இவரை யாரும் அடிக்கவில்லை. பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதால் அடித்துள்ளனர்.

3) பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது தொடர்பாக இவர் மீது டேராடூன் படேல் நகர் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

4) முதலில், கடந்த 2018ம் ஆண்டு இந்த வதந்தி பரவியுள்ளது. அப்போதே அது தவறானது என்று டேராடூன் எஸ்.எஸ்.பி வெளியிட்ட ட்வீட் நமக்கு கிடைத்துள்ளது.

5)டேராடூன் போலீசில் நேரடியாக பேசி இது தொடர்பன உண்மையை ஃபேக்ட் கிரஸண்டோ வெளியிட்டுள்ளது இணைக்கப்பட்டுள்ளத.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், 2018ல் பொய் என்று நிரூபிக்கப்பட்ட ஒரு வதந்தியை, இப்போது வெளியிட்டு விஷம பிரசாரம் செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இஸ்லாமியர் தெருவிற்குள் நுழைந்ததால் இந்து சன்னியாசி தாக்கப்பட்டாரா?

Fact Check By: Praveen Kumar 

Result: False