காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும்: சிஐஏ, கேஜிபி, மொசாட் அறிக்கை- பிபிசி செய்தி உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியே 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் என சிஐஏ, கேஜிபி, மொசாட் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்ஆப் ஃபார்வேர்ட் மெசேஜை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

தகவலின் விவரம்:
‘’2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்று, ஆட்சியமைக்கும் என சிஐஏ, கேஜிபி, மொசாட் சர்வே நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணிக்கு 95 முதல் 158 சீட்கள் மட்டுமே கிடைக்கும். அதேசமயம், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு, 225 முதல் 327 சீட்கள் கிடைக்கும். ராகுல் காந்தியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடி, இந்திய மக்களால் அதிகம் வெறுக்கப்படும் தலைவராக மாறியுள்ளார்,’’ என வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் வந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, பிபிசி இணையதளத்தின் ஹோம் பேஜ் லிங்கை ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
முதலில் இவர்கள் காட்டியுள்ள பிபிசி இணைப்பை கிளிக் செய்து பார்த்தோம். அது பிபிசி.,யின் செய்தி எதையும் காட்டாமல், வெறும் பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தையே www.bbc.co.uk காட்டுகிறது. வழக்கமாக, செய்தியின் இணைப்பை மேற்கோள் காட்டியே, செய்திகளை பகிர்வது வழக்கம். ஆனால், இங்கே பிபிசி.,யின் செய்தியை ஆதாரம் காட்டாமல், அந்த இணையதளத்தின் பெயரை மட்டும் ஆதாரம் காட்டி, இந்த பதிவை வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர் என தெளிவாகிறது.

இதன்பெயரில், ஃபேஸ்புக் போன்றவற்றில் ஏதேனும் தகவல் பகிரப்பட்டுள்ளதா என தேடிப் பார்த்தோம். அப்போது, ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு நிலைத்தகவலின் இணைப்பு கிடைத்தது. கூடவே, அது போலி செய்தி என, ஏற்கனவே, Factly மேற்கொண்ட ஆய்வின் விவரமும் கிடைத்தது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவின் இணைப்பை கிளிக் செய்து, பார்த்தோம். அதில், நமக்கு வந்திருந்த வாட்ஸ்ஆப் மெசேஜ் அப்படியே கட், காபி, பேஸ்ட் செய்திருந்தனர்.

Archived Link

இது ஏற்கனவே வதந்திதான் என Factly ஆய்வு செய்து, உண்மையை நிரூபித்துவிட்டது. இருந்தாலும், நமது பங்கிற்கு, கூகுளில் தேடல் செய்தோம். இதேபோல, மேலும் சில உண்மை கண்டறியும் நிறுவனங்கள், ஆய்வு செய்த விவரம்தான் கிடைத்தது. இதுபற்றி BoomLive நடத்திய ஆய்வின் விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

இறுதியாக, இந்திய நாடாளுமன்ற தேர்தல் பற்றி பிபிசி உண்மையிலேயே ஏதேனும் செய்தி வெளியிட்டதா என, தேடிப் பார்த்தோம். அப்போது, பிபிசி வெளியிட்ட சில செய்தி ஆதாரங்கள் கிடைத்தன. அவற்றின் ஆதாரப் படம் கீழே தரப்பட்டுள்ளது.

ஆனால், எவ்வளவு தேடியும், பிபிசி சொந்தமாகவோ அல்லது மற்ற கருத்துக் கணிப்பு விவரங்களை பகிர்ந்ததாகவோ எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகள், தவறான வதந்தி என உறுதி செய்யப்படுகிறது.

இதுவரை நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) பிபிசி.,யின் செய்தி இணைப்பை தராமல், பிபிசி ஹோம் பேஜ் லிங்கை கொடுத்து, வதந்தி பரப்பியுள்ளனர்.
2) வாட்ஸ்ஆப் மட்டுமின்றி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் இத்தகைய வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன.
3) பிபிசி அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை.
4) சிஐஏ, கேஜிபி, மொசாட் போன்றவை முறையே, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் உளவுத்துறை அமைப்புகளாகும். அவை சம்பந்தம் இல்லாமல் இந்திய தேர்தல் பற்றி வெளிப்படையாக ஆய்வு நடத்த முடியாது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒரு வதந்தி என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான, செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை, சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், சட்ட ரீதியான நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும்: சிஐஏ, கேஜிபி, மொசாட் அறிக்கை- பிபிசி செய்தி உண்மையா?

Fact Check By: Parthiban S 

Result: False