
‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது,’’ என்று கருணாநிதி, சர்க்காரியா கமிஷன் முன்பு, சாட்சியம் அளித்ததாகக் கூறி, ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:
#ஊழலின் பிதாமகன்… கட்டுமரம்

ஏப்ரல் 6ம் தேதி Mohan Raj என்பவர் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார். இதனை உண்மை என நம்பி, ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவை பார்க்கும்போதே இது முற்றிலும் தவறான தகவலின் அடிப்படையில் தயாரித்து, வெளியிடப்பட்டதாக, தெரியவருகிறது. காரணம், சர்க்காரியா கமிஷன், கருணாநிதி பற்றி விசாரணை செய்து, வெளியிட்ட அறிக்கையில் எந்த இடத்திலுமே விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தையை குறிப்பிடவே இல்லை. தப்பு நடந்திருக்கிறது, ஆனால், அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் நம்பகமான வகையில் இல்லை என்றுதான், சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது.
இதுதவிர, சர்க்காரியா கமிஷன் முதலில், இந்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தும் வகையில், பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஏற்படுத்தப்பட்டதாகும். எமர்ஜென்சி காலத்தில், வேறு வழியின்றி ,அரசியல் ஆதாயங்களுக்காக, எம்ஜிஆர் அளித்த புகாரின்பேரில், இந்திரா காந்தி, கருணாநிதி அரசின் ஊழல் பற்றி விசாரணை நடத்தும்படி சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். கமிஷன் என்பதற்கும், விசாரணைக் குழு என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இதுவும், மேற்கண்ட வதந்தியை வெளியிட்டவர்களுக்கு புரிந்திருக்கவில்லை.
அத்துடன், எந்த எம்ஜிஆர் கருணாநிதி பற்றி புகார் எழுப்பினாரோ, அந்த எம்ஜிஆரே, பின்னாளில், ‘’என்னைச் சுற்றியுள்ளவர்கள் சொன்னதன் அடிப்படையில்தான், கருணாநிதி மீது புகார் அளித்தேன். கருணாநிதி என்னென்ன ஊழல் செய்தார் என்ற விவரம் எனக்குத் தெரியாது. வழக்கறிஞர் கண்ணன் என்பவர் எனக்கு தொகுத்து தந்த விவரங்களையே குடியரசுத் தலைவரிடம் கொடுத்தேன்,’’ எனக் கூறி, சர்க்காரியா விசாரணையில் இருந்து நழுவி விட்டார். இதனால், சர்க்காரியா விசாரணைக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கமே தவிடுபொடியாகிவிட்டது. வேறு வழியின்றி, பல்லைக் கடித்துக் கொண்டு, பெயருக்கு ஒரு அறிக்கையை சர்க்காரியா குழு வெளியிட நேரிட்டது.
சர்க்காரியா குழு கருணாநிதி அரசு பற்றி வெளியிட்ட அறிக்கை விவரம், பல்வேறு இடங்களில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டது. இதனை வாபஸ் பெறுவதாக, மொரார்ஜி தேசாய் மற்றும் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது.
இதுதவிர, சர்க்காரியா குழுவின் அறிக்கை விவரம் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு கிடைப்பதில்லை. இந்தியாவில் ஒரு பழக்கம் உள்ளது. காலம் காலமாக எதாவது ஒரு வதந்தியை அடிப்படை ஆதாரமின்றி, மற்றவர்களுக்கு பரப்புவதுதான் அந்த கேடுகெட்ட பழக்கம். அதன்படியே, கருணாநிதி இப்படி சர்க்காரியா கமிஷனில் சாட்சி சொன்னார் என்ற கருத்தும் பரப்பப்படுகிறது. சர்க்காரியா முன்னிலையில் கருணாநிதி சாட்சி சொல்லும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை.
மேலும், இது நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை இல்லை. எனவே, இதுபற்றி சர்க்காரியா தீர்ப்பு எதுவும் எழுதவில்லை. அவர் விசாரணை அறிக்கை மட்டுமே சமர்ப்பித்தார். அதிலும், குற்றம் நடந்திருக்கிறது, அதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இத்தகைய வதந்தி பரப்புவோர் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், சர்க்காரியா குழு கருணாநிதி அரசு பற்றி நடத்திய விசாரணை தொடர்பாக, நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட சிறப்புச் செய்தி காணொளி கீழே தரப்பட்டுள்ளது.
சரி, இந்த பதிவில் உள்ளதுபோல, கருணாநிதி சாட்சி சொன்னாரா என கூகுளில் சும்மா தேடிப் பார்த்தோம். அப்போது, இதுபோல பரவிவரும் பல வதந்திகள் கிடைத்தன.

இதில், தினமலர் பெயரில் ஒரு இணைப்பு கிடைத்தது. அதை திறந்து பார்த்தபோது, சுவாரசியமான கட்டுக்கதை ஒன்றை ஒருவர் எழுதியிருந்ததைக் காண நேரிட்டது.

உண்மையில், இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. இதை பகிர்ந்திருப்பவர் ஒரு வழக்கறிஞர். வதந்தியை உண்மை போல பரப்பும் இவரை நம்பி, வழக்கு நடத்தும் வாடிக்கையாளர்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
விஞ்ஞான ஊழல் என்றே சர்க்காரியா விசாரணையில் சொல்லாத நிலையில், அதுபற்றி இஷ்டத்திற்கு, நேரில் பார்த்ததுபோல, இப்படியெல்லாம் வதந்தி பரப்பி வருகிறார்கள். இதனை அடிக்கடி கேள்விப்படும்போது, மற்றவர்களும் உண்மை என்றே நம்ப நேரிடுகிறது. இதுபற்றி விரிவாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், கருணாநிதி அரசின் செயல்பாடுகள், அவர் சார்ந்த அமைச்சரவை மற்றும் உறவினர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட 28 குற்றச்சாட்டுகளை வைத்துத்தான் சர்க்காரியா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், ரேஷன் சர்க்கரை மூட்டைகள் காணாமல் போனதாக, எந்த குற்றச்சாட்டும் கூறப்படவில்லை.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் செய்தி அடிப்படை ஆதாரமற்ற தவறான தகவல் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா?
Fact Check By: Parthiban SResult: False
