
‘’இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Gulla Boys என்ற ஃபேஸ்புக் ஐடி ஜூலை 22, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், முத்துலட்சுமி ரெட்டியின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையை பெற்றவரும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமைக்குரியவருமான, இந்தியாவின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் நினைவு தினம் இன்று,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இதில் முத்துலட்சுமி பற்றி குறிப்பிடும் விசயங்களில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் இவர் மட்டுமே என்ற விசயம் நமக்கு சிறிது சந்தகேத்தை ஏற்படுத்தியது. இதன்பேரில், முதலில் கூகுள் சென்று இதுதொடர்பாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா என தேடிப் பார்த்தோம்.
அப்போது, மேற்கத்திய கல்வி முறையில் மருத்துவப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தி பாய் ஜோஷி என்பதும், ஆனால், அவர் மருத்துவ பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார் என்ற தகவலும் கிடைத்தது.

1865ம் ஆண்டு மும்பையின் கல்யாண் பகுதியில் பிறந்தவரான ஆனந்திபாய் அமெரிக்கா சென்று பென்னிசில்வேனியா பகுதியில் உள்ள மகளிர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்றுள்ளார். ஆனால், அடுத்த ஆண்டே 1887ம் ஆண்டு தனது 21வது வயதிலேயே உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். இவரது காலத்தில் இந்தியாவில் மருத்துவக் கல்வி கிடையாது. வெளிநாடு சென்றுதான் படிக்க வேண்டும். இவர் பட்டம் பெற்று இந்தியா திரும்பி மருத்துவ பணியை செய்திருந்தால் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியிருப்பார். இவரை பற்றி என்டிடிவி வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இவரை அடுத்து, யாரேனும் பெண் மருத்துவர் இந்தியாவில் இருந்தாரா என்ற சந்தேகத்தில் மீண்டும் விவரம் தேடினோம். அப்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காதம்பினி கங்குலி என்பவர் இந்தியாவில் மருத்துவக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டபோது, அதில் முதல் பெண்ணாக சேர்ந்து படித்து பட்டம் பெற்றதாக தகவல் கிடைத்தது.
1861ம் ஆண்டு பிறந்தவரான காதம்பினி கங்குலி, இந்தியா மற்றும் தெற்காசிய அளவில் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையுடன், மருத்துவராக பணிபுரிந்திருக்கிறார். இவர், 1923ம் ஆண்டு கல்கத்தாவில் உயிரிழந்தார்.

எனவே, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்பது முத்துலட்சுமி ரெட்டிக்குப் பொருந்தாது. ஆனால், அவர் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஆவார்.
அதாவது, 1886ம் ஆண்டு பிறந்தவரான முத்துலட்சுமி, 1912ல் மருத்துவப் பட்டம் பெற்றார். இந்தியாவில் அப்போது இருந்த மிகச் சில பெண் மருத்துவர்களில் முத்துலட்சுமியும் ஒருவர் ஆவார். ஆனால், அவர் முதல் பெண் மருத்துவர் கிடையாது.
அதேசமயம், அவர் முதல் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்துள்ளார். அவர்தான் சட்ட மன்றத்திற்கு (சட்ட மேலவை) தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய பெண் ஆவார். இதுபோல நிறைய முதல் பெருமைகளுக்குச் சொந்தக்காரராக இருந்துள்ளார். எனினும், அவர்தான் முதல் பெண் மருத்துவர் என்று சொல்வது தவறாகும்.

இதேபோல, அவர் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் கிடையாது. மாநகராட்சியில் முதல் பெண் உறுப்பினராக இருந்துள்ளார்.
மேலும், இந்திய மகளிர் சங்கத்தின் (AIWC) முதல் தலைவர் முத்துலட்சுமி ரெட்டி கிடையாது.

இறுதியாக, மகளிர் இந்தியா கூட்டமைப்பு (WIA) அவர் தொடங்கவில்லை. அது, 1917ம் ஆண்டு அன்னிபெசன்ட் அவர்களால் தொடங்கப்பட்டதாகும்.
முத்துலட்சுமி ரெட்டி பல பெருமைகளுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும், மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள விசயங்களுக்குச் சொந்தக்காரர் இல்லை.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தவறு என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக ஊடகங்களில் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவரா?
Fact Check By: Pankaj IyerResult: False
