“தமிழக அரசின் நீட் பயிற்சி பெற்ற ஒருவர் கூட வெற்றிபெறவில்லை” – ஃபேஸ்புக் அதிர்ச்சி!

அரசியல் சமூக ஊடகம்

நீட் தேர்வில் பங்கேற்க தமிழக அரசு 19,355 பேருக்கு பயிற்சி அளித்ததாகவும் அதில் ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றிபெறவில்லை என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.தகவலின் விவரம்:

TN Govt 2.png

Facebook Link I Archived Link

தமிழக அரசு அளித்த நீட் பயிற்சியில் பங்கேற்ற 19,355 மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கிலத்தில் வெளியிட்ட செய்தியை புகைப்படமாகப் பகிர்ந்துள்ளனர்.

நிலைத் தகவலில், “நீட் தேர்வில் தமிழக அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட 19,355 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. நீட் கோச்சிங் சென்டர் குடுத்த தமிழக அரசு தும்பஞ் செடியில மாட்டிட்டு தொங்குங்க தூ…

2017லயே திருப்பி அனுப்பிய நீட் மசோதாவை எதுவுமே பண்ணாம இருக்க உங்களுக்கு வெட்கமா இல்ல… கொஞ்சம் கூட கூசலயா” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Varan Kandasamy என்பவர் 21 ஜூலை 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதுபோன்ற பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா முழுவதும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடக்கிறது. தமிழகத்தில் முன்பு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தது. நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் படித்த மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தனர். நாமக்கல் மாதிரி சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த பல அரசுப் பள்ளி மாணவ மாணவிகளும் மருத்துவம் படிக்க முடிந்தது.

நீட் தேர்வு காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நீட் தேர்வு நடைமுறைக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது… இதுவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 11 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில், “நீட் தேர்வில் தமிழக அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட 19,355 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை” என்று சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை பார்த்தோம். “தமிழக அரசின் நீட் பயிற்சி பெற்றவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை” என்று தலைப்பிட்டு கடந்த ஜூலை 21ம் தேதி இந்த செய்தியை வெளியிட்டிருந்தனர்.

அதில், “கடந்த ஆண்டு தமிழக அரசின் நீட் பயிற்சிக்காக 19,355 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2747 மாணவர்களுக்கு தங்கி படிக்கும் வகையில் பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரசு பயிற்சி பெற்றவர்களில் 2000-க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றனர்.

TN Govt 3.png

பயிற்சி அளிக்கும் நிறுவனத்துக்கு சரியாக பணம் அளிக்காததால் பயிற்சி இடையில் நிறுத்தப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு நீட் பயிற்சிக்கு தேவையான பாடத்திட்டம், பயிற்சி புத்தகம் உள்ளிட்ட எதையும் அரசு வழங்கவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும், “இந்த ஆண்டு ஜூலை மாதம் முடியப் போகிறது… இன்னும் நீட் பயிற்சி பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை” என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இந்த செய்தியை தமிழில் பல ஊடகங்களும் வெளியிட்டு இருந்தன.

இந்த செய்தியில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். யாருமே நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை என்று குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் யாருக்கும் மருத்துவ கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்றே குறிப்பிட்டு இருந்தனர்.

அரசு நீட் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள் என்று கூகுளில் தேடினோம். அப்போது விகடன் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. 2583 பேர் தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டு இருந்தது. ஆனால், இவர்களில் 10 பேருக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived Link

TN Govt 4.png

அரசு நீட் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையா என்று தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், தமிழக அரசு நீட் பயிற்சி பெற்றவர்களில் இரண்டு மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு இடம் கிடைத்துள்ளது. வேண்டுமென்றால் மாணவர் பட்டியலையே அளிக்கிறேன்… சரி பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். 

இது தொடர்பான “அமைச்சர் கல்வி செங்கோட்டையன் பெருமிதம்” என்று கலைஞர் செய்திகள் வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் (Archived Link) செய்யுங்கள். நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில்,

நீட் தேர்வில் தமிழக அரசின் பயிற்சி பெற்ற 19,355 மாணவர்களில் 2583 பேர் தேர்ச்சி பெற்றது உறுதியாகி உள்ளது.

2 பேருக்கு மருத்துவக் கல்லூரி இடம் கிடைத்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்குக் கூட மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்ற தகவலை, ஒருவர் கூட நீட் தேர்வில் வெற்றிபெறவில்லை என்று தவறாக வெளியிட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நீட் தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“தமிழக அரசின் நீட் பயிற்சி பெற்ற ஒருவர் கூட வெற்றிபெறவில்லை” – ஃபேஸ்புக் அதிர்ச்சி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •