
‘’அமெரிக்க பாலைவனத்தில் தோன்றிய பிரமாண்ட ஸ்ரீ சக்ர எந்திரம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link | Aanmikam News Link | Archived Link |
ஆன்மீகம் என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். அதில், ‘’அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தில் உள்ள மிக்கிபேசின் பாலைவனப்பகுதியில் 13.3 மைல் சதுர பரப்பளவில் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் ஸ்ரீ சக்ர வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அமெரிக்க ராணுவ அதிகாரி பில் மில்லர் என்பவர் விமானத்தில் பறந்தபோது கண்டுபிடித்தார். இந்த ஸ்ரீ சக்ர வடிவத்தை யார் வரைந்தார் என்ற விவரம் இதுவரை கிடைக்கவில்லை. இது வேற்று கிரக வாசிகளுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலாக இருக்கலாம்,’’ என்று தெரிவித்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் கமெண்டிலேயே பலர் இதன் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பியுள்ளதை காண முடிகிறது.

இதுகுறித்து கூகுளில் முதலில் தகவல் ஆதாரம் தேடியபோது நமக்குச் சில விவரங்கள் கிடைத்தன. இந்த ஸ்ரீ சக்ர எந்திரத்தை Bill Witherspoon என்பவர் 1990ம் ஆண்டில் வரைந்தார் என்றும், அதற்குப் பின் விமானத்தில் பறந்த அமெரிக்க வீரர்கள் சிலர் இதனைக் கண்டறிந்து வெளி உலகிற்கு தெரிவித்தனர் என்றும் தெரியவருகிறது.

இதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியக் கலைஞரான Bill Witherspoon இந்திய மக்கள் பெரிதும் மதிக்கும் ஸ்ரீ சக்ர எந்திரம் பற்றி கேள்விப்பட்டு, அதுபற்றி சில புத்தகங்களையும் படித்து ஆய்வு செய்துள்ளார். பிறகு, தனது குழுவினருடன் அமெரிக்காவின் ஒரேகான் பகுதியில் உள்ள பாலைவனத்தில் ஆள் நடமாட்டம், செடி, கொடிகள் இல்லாத இடத்திற்கு சென்று சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ சக்ர எந்திரத்தை வரைய தீர்மானித்தாராம். இதனை 1990ம் ஆண்டு திட்டமிட்டபடி நிறைவு செய்திருக்கிறார். இதுபற்றிய செயல் அறிக்கையை அவர் ஏற்கனவே ஆவணமாக சமர்ப்பித்துள்ளார். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Bill Witherspoon Submitted Paper Link |
இதுதவிர பல தரப்பிலும் ஸ்ரீ சக்ர எந்திரம் பற்றி வதந்திகள் பரவிய நிலையில், இதனை மறுத்து Bill Witherspoon விரிவான விளக்கமும் பல முறை அளித்துள்ளார். அதில் சில கட்டுரைகளின் இணைப்பை கீழே இணைத்துள்ளோம். 1990ல் ஸ்ரீ சக்ர எந்திரம் வரைந்த அதே இடத்திற்கு, 2017ல் தனது குழுவினருடன் நேரில் சென்று Bill பார்வையிட்டுள்ளார். மேலும், தனது குழுவினர் சொல்வதை யாரும் நம்பவில்லை என்பதால் இதுபற்றி பிரத்யேக ஆவணப்படத்தையும் அவர் தயாரித்து பகிர்ந்திருக்கிறார்.

Bill Witherspoon Interview | Article by Bill Witherspoon | Band of Iowa Artists Interview |
நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) அமெரிக்க பாலைவனத்தில் ஸ்ரீ சக்ர எந்திரம் வரையப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், அது தானாக வரையப்படவில்லை. ஏலியன்களுக்கு சிக்னல் தரவும் வரைந்ததல்ல.
2) அமெரிக்காவைச் சேர்ந்த ஓவிய கலைஞர் Bill Witherspoon என்பவர் இதனை தனது குழுவினருடன் சேர்ந்து 1990ம் ஆண்டு வரைந்திருக்கிறார். இதுபற்றி பலவித வதந்திகள் ஏற்படவே, அவரே முன்வந்து இதனை வரைந்தது யார் என விளக்கம் அளித்துள்ளார். மேலும், ஆவணப்படம் ஒன்றையும் அவர் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் தவறான தகவல் கலந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அமெரிக்க பாலைவனத்தில் தோன்றிய பிரமாண்ட ஸ்ரீ சக்ர எந்திரம்: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
