எம்ஜிஆர் அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி: ரஜினி பெயரில் போலி செய்தி!

அரசியல் சமூக ஊடகம்

“எம்.ஜி.ஆர் என்னை கட்டி வைத்து அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி” என்று ரஜினிகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Rajini 2.png
Facebook LinkArchived Link

புதிய தலைமுறை நியூஸ் கார்டுடன் ஒரு சினிமா காட்சியை சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “எம்.ஜி.ஆர் என்னை கட்டிவைத்து அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி – ரஜினிகாந்த்” என்று இருந்தது.

சினிமா காட்சிப் பகுதியில், “கருணாநிதி உன்னை காப்பாற்றினது இருக்கட்டும். எம்.ஜி.ஆர் எதுக்கு கட்டி வச்சி அடிச்சார்னு முதல்ல சொல்லு” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. 

நிலைத் தகவலில், “எம்.ஜி.ஆர் கட்டி வச்சு அடிச்சதை வெட்கமே இல்லாமல் சொல்பவன் இந்த மராட்டிதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sundhar Ram என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 20 நவம்பர் 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ரஜினிகாந்த்தை எம்.ஜி.ஆர் கட்டிவைத்து அடித்தார் என்று பல ஆண்டுகளாக வதந்தி உலாவி வருகிறது. இது தவறான தகவல், வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் என்று நடிகை லதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். எனவே, அது பற்றி விரிவாக நாம் ஆய்வு மேற்கொள்ளவில்லை. புதியதலைமுறை பெயரில் வந்துள்ள நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

tamil.filmibeat.comArchived Link

வழக்கமாக புதிய தலைமுறை நியூஸ் கார்டில் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும். இதில் தேதியை அகற்றவிட்டனர். அதனால் எப்போது வெளியானது என்று தெரியவில்லை. தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது. வழக்கமான புதியதலைமுறை நியூஸ் கார்டு ஃபாண்ட் இது இல்லை. மேலும், பின்னணி டிசைன் உள்ளிட்ட வேறு சில விஷயங்கள் இது எடிட் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்று உணர்த்தியது.

இது குறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவைத் தொடர்புகொண்டு இந்த கார்டு உண்மையா என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “இந்த கார்டு போலியானது. இதன் அசல் நியூஸ் கார்டு 2018 ஆகஸ்ட் 13ல் வெளியாகி உள்ளது. கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால்- ரஜினிகாந்த் ஆவேசம்” என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் அந்த நியூஸ் கார்டு உள்ளது” என்றனர்.

Rajini 3.png
puthiyathalaimurai.comArchived Link

அவர்கள் கூறியபடி நியூஸ்கார்டை தேடி எடுத்தோம். அதில், “தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வந்திருக்க வேண்டாமா? ஒட்டுமொத்த அமைச்சர்களும் பங்கேற்று இருக்க வேண்டாமா? – ரஜினிகாந்த்” என்று இருந்தது.

Rajini 4.jpg

இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து, விஷமத்தனமான கருத்தை சேர்த்து வெளியிட்டுள்ளது உறுதியானது. இதன் அடிப்படையில், “எம்.ஜி.ஆர் என்னை கட்டிவைத்து அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி” என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எம்ஜிஆர் அடித்தபோது காப்பாற்றியவர் கருணாநிதி: ரஜினி பெயரில் போலி செய்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False