பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடி கொடுத்து வெளிநாடு தப்பிய நீரவ் மோடி?– ஃபேஸ்புக் பகீர்

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடி கொடுத்த பிறகே அவர்கள் தன்னை வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல அனுமதித்தார்கள் என்று நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Nirav Modi 2.png

Facebook Link I Archived Link

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு செய்து வெளிநாட்டுக்கு தப்பி பிரபல வைர வியாபாரி ஓடிய நீரவ் மோடி படம் வைக்கப்பட்டுள்ளது. அதில், “காங்கிரஸிற்கு ரூ.562 கோடி பணம் கைமாறிய பின்னரே என்னை வழி அனுப்பி வைத்தனர்! – நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் வாக்குமூலம்!” என்று இருந்தது. இந்த பதிவை Ponni Ravi என்பவர் 2019 ஜூன் 26ம் தேதி வெளியிட்டுள்ளார். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, 2018 ஜனவரியில் வெளிநாடு தப்பிச் சென்றார். அதன்பிறகே, அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம் வெளியே தெரிந்தது. 2018 ஜனவரி 29ம் தேதி ரூ.11,500 கோடி அளவுக்கு நீரவ் மோடி கடன் உத்தரவாத மோசடி செய்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. அதன்பிறகு, நீரவ் மோடி வீட்டை சோதனையிட்டு, சொத்துக்களை முடக்கினர்.

லண்டனில் பதுங்கியிருந்த அவரை ஒரு பத்திரிகையாளர் பேட்டி எடுத்து வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நீரவ் மோடி விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது. இந்தநிலையில், லண்டனில் வங்கிக் கணக்கு தொடங்க முயன்ற நீரவ் மோடியை போலீசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான முயற்சியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து வெளியேற காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடியை அளித்ததாக நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீரவ் மோடி வெளிநாடு தப்பிச் செல்லும்போது மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் இருந்தது. விமானநிலையம் எல்லாம் மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அப்படி இருக்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு லஞ்சம் கொடுத்தால் எப்படி பா.ஜ.க அரசு வசம் உள்ள சிவில் விமான போக்குவரத்துத் துறை கேட்கும் என்ற அடிப்படை கேள்வி எழுந்தது.

இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய, நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளாரா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

லண்டன் நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீரவ் மோடி மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், “நான் எந்த தவறும் செய்யவில்லை. லண்டனில் உள்ள ஒரு வைர நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். 20,000 பவுண்ட் சம்பளம் பெறுகிறேன். அதற்கான வரியை இங்கிலாந்து அரசுக்கு செலுத்துகிறேன். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. லண்டன் பள்ளியில் படிக்கும் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உள்ளது. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறியதாக இருந்து. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதற்கிடையே, இந்த வழக்கில், இந்திய தரப்பில் தங்களையும் இணைத்துக்கொள்ள மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து அரசுக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது. அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மும்பையில் உள்ள சிறையில், ஐரோப்பிய சிறை விதிமுறைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட சிறை அறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இங்கிலாந்து அரசு அந்த கடிதம் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய தேடலில், லண்டன் நீதிமன்றத்தில், காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுத்ததால் அவர்கள் என்னை வெளிநாட்டுக்கு அனுப்பினார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

ஆனால், இந்த தகவல் தொடர்பாக இந்தி ஃபேக்ட் கிரஸண்டோ (www.factcrescendo.com) நடத்திய உண்மை கண்டறியும் ஆய்வும் நமக்குக் கிடைத்தது. அதில், இந்த தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய தேடலில் இன்னொரு தகவல் கிடைத்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, பா.ஜ.க பணம் வாங்கிக்கொண்டு நீரவ் மோடியைத் தப்பிக்க வைத்ததாகப் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. அதன் உண்மை கண்டறியும் ஆய்வினை பலரும் நடத்தினர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில், லண்டனில் தவறான தகவல் அளித்து வங்கிக் கணக்கு தொடங்க முயன்ற குற்றத்திற்காக நீரவ் மோடி கைது செய்யப்பட்டது தெரிந்தது.

 நீதிமன்றத்தில் நீரவ் மோடி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறியது தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்குப் பணம் கொடுத்து தப்பியதாக நீரவ் மோடி கூறியதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

இதே குற்றச்சாட்டு பா.ஜ.க தலைவர்கள் மீது சுமத்தி சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவியதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Update:

இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி…

இந்தியாவில் இருந்து தப்பிக்க முறைகேடு செய்து பெற்ற பணத்தில் பெரும்பகுதியைக் காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கினேன் என்று நீரவ் மோடி கூறியதாக சமூக ஊடகங்களில் பரவுவதைப் போன்று, பா.ஜ.க தலைவர்களுக்குக் கொடுத்துவிட்டு தப்பினேன் என்று நீரவ் மோடி கூறியதாகவும் வதந்திகள் பரவுகின்றன.

நீரவ் மோடி மீதான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இதை எதிர்த்து நீரவ் மோடி மேல் முறையீடு செய்துள்ளார்.

அசல் பதிவைக் காண: ndtv.com I Archive 1 I dinamani.com I Archive 2

நீரவ் மோடி தான் மோசடி செய்ததில் பெரும் பகுதியைக் காங்கிரஸ், பா.ஜ.க தலைவர்களுக்கு கொடுத்துவிட்டேன் என்று நீதிமன்றத்தில் கூறியதாக எந்த பதிவும் இல்லை. தீர்ப்பு வெளியான போது, நீரவ் மோடி இவ்வாறு கூறினார் என்று கூட நீதிபதி கூறவில்லை. நீரவ் மோடி குற்றம் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளார். எனவே, காங்கிரஸ், பா.ஜ.க தலைவர்களுக்கு பணத்தைக் கொடுத்துத் தப்பினேன் என்று நீரவ் மோடி கூறியதாகப் பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடி கொடுத்து வெளிநாடு தப்பிய நீரவ் மோடி?– ஃபேஸ்புக் பகீர்

Fact Check By: Praveen Kumar 

Result: False

Updated On 06, November, 2021.

1 thought on “பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.562 கோடி கொடுத்து வெளிநாடு தப்பிய நீரவ் மோடி?– ஃபேஸ்புக் பகீர்

  1. So my post which is shared was proved by ur page as false,right?
    May I know your contact a dress?

Comments are closed.