நித்தியானந்தா காலில் விழுந்த அமித்ஷா: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

நித்தியானந்தா நாட்டைவிட்டுத் தப்பி ஓட முயலும்போது அவரை அமித்ஷா பிடித்த தருணம் என்று நித்தியானந்தா காலில் அமித்ஷா விழுந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

AMIT SHAH 2.png
Facebook LinkArchived Link

நித்தியானந்தா காலில் ஒருவர் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். பார்க்க அமித்ஷா போல தெரிகிறது. ஆனால், உடல்வாகு அமித்ஷா போலத் தெரியவில்லை. காலில் விழும் அவரை தூக்க நித்தியானந்தா கையை அவருடைய தோள்பட்டை மீது பிடிப்பது போல் உள்ளது. இதனால், காலில் விழுபவர் முகம் மறைந்துவிட்டது. 

நிலைத் தகவலில், “நித்தியானந்தா நாட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது அமித்ஷா அவரை பிடித்து தடுத்த தருணம்” என்று பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் காலில் விழுபவர் அமித்ஷா என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்த பதிவை, Krishnavel T S என்பவர் 2019 நவம்பர் 23ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தில் உள்ளவரின் தலை, தோற்றத்தைப் பார்க்கும்போது அது அமித்ஷா போல உள்ளது. எனவே, அமித்ஷாதான் நித்தியானந்தா காலில் விழுந்துள்ளார் என்று கருதி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மையில் இது அமித்ஷாவா, எப்போது இந்த சந்திப்பு நடந்தது என்று ஆய்வு மேற்கொண்டோம்.

படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் பற்றிய உண்மை விவரம் நமக்கு கிடைத்தது. நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலேயே இந்த புகைப்படம் பகிரப்பட்டு இருந்தது. அதைப் பார்த்தோம்.

AMIT SHAH 3.png
Search Link

nithyananda.org என்ற இணையதளத்தில் 2017 ஜூலை 9ம் தேதி இந்த படம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதில், நித்தியானந்தா பீடம், பெங்களூரூ ஆதீனம், குரு பூர்ணிமா கொண்டாட்டம் என்று தலைப்பிட்டிருந்தனர். அதில், இந்தியாவுக்கான மொரீஷியஸ் ஹைகமிஷனர் ஜெகதீஷ்வர் கோவர்த்தனுடன் நித்தியானந்தா என்று பதிவிட்டிருந்தனர். 

தொடர்ந்து, “மொரீஷியசில் நித்தியானந்தா குருகுலம் மற்றும் நித்தியானந்தா பல்கலைக் கழகம் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ கையேழுத்திடும் நிகழ்வு நடந்தது” என்றும், “குருவை குருபூர்ணிமா அன்று சந்தித்து வாழ்த்து பெற்றதன் மூலம் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன், இந்த உலகத்திலேயேயே மிகவும் அதிர்ஷ்டசாலி நான்தான்” என்று இந்தியாவுக்கான மொரீஷியஸ் ஹை கமிஷனர் கூறியதாகவும் குறிப்பிட்டு சில படங்களை பகிர்ந்திருந்தனர்.

AMIT SHAH 4.png
nithyananda.orgArchived Link

இந்த படத்தை வேறு யாராவது பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். அப்போது, therationalhindu என்ற இணையதளம் இந்த படம் மற்றும் மொரீஷியசில் நித்தியானந்தா குருகுலம், பல்கலைக் கழகம் அமைக்கப்பட உள்ளதைப் பற்றியும், ஒரு நல்ல வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது என்றும் செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதிலும் கூட, இந்தியாவுக்கான மொரீஷியஸ் நாட்டின் தூதர் என்றே குறிப்பிட்டிருந்தனர்.

therationalhindu.comArchived Link

நம்முடைய ஆய்வில், படத்தில் இருப்பவர் அமித்ஷா இல்லை, மொரீஷியஸ் நாட்டுத் தூதர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், “நித்தியானந்தா காலில் விழுந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்று பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நித்தியானந்தா காலில் விழுந்த அமித்ஷா: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False