
‘’நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

செப்டம்பர் 19, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், அர்ஜூன் சம்பத் மற்றும் சூர்யா இருவரும் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவேன் – அர்ஜூன் சம்பத்,’’ என்றும், ‘’என்னை அடித்தால் ரூ.1 லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு வழங்க தயார்- சூர்யா,’’ என்றும் எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆய்வை தொடங்கும் முன்பாக, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டை ஒருமுறை பார்வையிட்டோம். Clown Media என்ற லோகோ உடன் இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டிருந்தது.

எனவே, Clown Media என்ற பெயரில் ஏதேனும் ஊடகம் செயல்படுகிறதா என தகவல் தேடினோம். அப்போது, இத்தகைய ஒரு ஃபேஸ்புக் பக்கம் உள்ளதாக தெரியவந்தது. ஆனால், அவர்களது பக்கத்தில் நீண்ட நேரம் தேடியும் இவ்வாறான தகவல் காண கிடைக்கவில்லை.
ஒருவேளை தகவல் பகிர்ந்த பின், இது தவறான தகவல் என தெரியவந்ததும், அதனை நீக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, குறிப்பிட்ட தகவல் பற்றி சரிபார்க்க தொடங்கினோம். இதன்படி, நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு என்று அர்ஜூன் சம்பத் நேரடியாக அறிவிக்கவில்லை.
மாறாக, இந்து மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தர்மா என்பவர், இவ்வாறு பேசியுள்ளார்.

இதனை சிலர் தவறாக புரிந்துகொண்டு, இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் இவ்வாறாக பேசியதாக தகவல் பகிர, அதனை மற்றவர்களும் உண்மை போல பகிர்ந்து வருகின்றனர்.
இதுபற்றி செப்டம்பர் 19ம் தேதியே அர்ஜூன் சம்பத் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுதவிர, நடிகர் சூர்யா, தன்னை அடிக்கும் வாய்ப்பை ஒரு ஏழை மாணவனுக்கு வழங்க தயார் என்று கூறியதாக, எங்கேயும் செய்தி காண கிடைக்கவில்லை.
எனவே, இந்து மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தர்மா என்பவர் பேசியதன் பேரில், அர்ஜூன் சம்பத் மற்றும் சூர்யாவை தொடர்புபடுத்தி இந்த வதந்தியை சிலர் உருவாக்கி, பகிர்ந்துள்ளனர். இருவருமே இதுபோன்ற வார்த்தைப் போரில் ஈடுபடவில்லை என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.
சமீப நாட்களாக, சமூக வலைதளங்களில், நடிகர்கள், அரசியல்வாதிகள் என பலரது பெயரை மேற்கோள் காட்டி, தமது இஷ்டத்திற்கு ஏதேனும் வதந்தியை கிளப்பிவிடுவதை சிலர் வாடிக்கையாகச் செய்துவருகின்றனர். அதில் ஒன்றுதான் மேற்கண்ட தகவலும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு: அர்ஜூன் சம்பத் பற்றிய தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
