சொத்தைப்பல்லை சரியாக்கும் வெங்காயம் – நல்லெண்ணெய்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

ஆரோக்கியம் சமூக ஊடகம் | Social

சின்ன வெங்காயம் சாறு மற்றும் நல்லெண்ணெய்யை சமஅளவு எடுத்து  கலக்கி, சொத்தைப் பல் மீது வைத்தால் சிறிது நேரத்திலேயே சொத்தைப் பல் பூச்சி இறந்து, பல் வலியும் குணமாகிவிடும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Dental 2.png
Facebook LinkArchived Link

புகைப்படத்துடன் பகிரப்பட்ட தகவலை, ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “சின்ன வெங்காயம் அரைத்து சாறு 3 ஸ்பூன் அளவு எடுத்து அதில் சம அளவு செக்கு நல்லெண்ணெய் கலக்கி, அதில் 3 சொட்டுக்களை பலிக்கும் சொத்தைப் பல் மீது வைத்தால் சிறிது நேரத்தில் சொத்தைப் பல் பூச்சியும் இறந்து பல் வலியும் குணமாகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை தேனி சிவகுமரன் விஎச்பி என்பவர் நாட்டு மருந்து என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 நவம்பர் 17ம் தேதி பகிர்ந்துள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

எந்த ஒரு மருத்துவத்திலும் உடனடி நிவாரணம் என்று கூறுவது இல்லை. குறைந்தபட்சம் ஒரு சில நாட்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் பலன் பெறலாம் என்று மட்டுமே கூறுகின்றனர். ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், சின்ன வெங்காய சாறுடன், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை சேர்த்து சொத்தைப் பல் மீது வைத்தால் சிறிது நேரத்தில் குணமாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். நல்லெண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்தால் நல்லது என்று கூறுவார்கள். நம்முடைய பாரம்பரிய மருத்துவ அடிப்படையில் அவ்வாறு சொல்லப்படுகிறது. ஆயுள் புல்லிங் செய்ததால் குணமானது என்று உறுதியாக கூறும் வகையில் எந்த ஒரு ஆய்வு முடிவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் வெங்காயம், நல்லெண்ணெய் நல்லதா, இது தொடர்பாக ஏதேனும் ஆய்வு உள்ளதா என்று தேடினோம். கூகுளில் தேடியபோது. வெங்காயத்தில் உள்ள சல்பர் என்ற ரசாயனம் வாயில் உள்ள பாக்டீரியாவை அழிக்கும் தன்மை கொண்டது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், பல் சிதைவை நீக்கும் என்று எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

Dental 3.png

உண்மையில் சித்த மருத்துவம் அல்லது பாரம்பரிய மருத்துவத்தில் சின்ன வெங்காயம் – நல்லெண்ணெய் சொத்தைப்பல் சிகிச்சைக்கு பயன்படுகிறதா என்று மூலிகை ஆராய்ச்சியாளர் பெல்சினிடம் கேட்டோம். 

“பொதுவாக மூலிகைகளுக்கு மருத்துவ குணங்கள் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. வெறும் இஞ்சி, சுக்கு அல்லது கிராம்பை நசுக்கி பல் வலி உள்ள இடத்தில் வைத்தாலே வலி குறைந்துவிடும். அதேபோல் புதினாவுடன் கிராம்பு சேர்த்து அரைத்து பல் வலி, அரணை வீக்கம் உள்ள இடத்தில் வைத்து தேய்த்தால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். ஆனால், வாட்ஸ் அப்பில் உலவும் இந்தத் தகவலில் கூறியுள்ளபடி `சிறிதுநேரத்தில் பல்லில் உள்ள பூச்சி இறந்துவிடும், வலி குணமாகிவிடும்’ என்பது மூலிகைகளின்மீதான நம்பிக்கையை குலைக்கும். மக்களும் உண்மையென்று நம்பி, அதை செய்து பார்த்து பலனில்லாத பட்சத்தில் மகத்துவம் மிக்க மூலிகைகளின்மீது நம்பிக்கை அற்றுப்போய்விடும். 

BELSIN.jpg

புகைப்படம்: பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர்

இதே சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் பிரச்னை பெரிதாக இருக்கும்பட்சத்தில் இதே வைத்தியத்தை தன்னிச்சையாக செய்து பார்ப்பது சரியல்ல. உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம். ஆபத்து காலத்தில் அவசர நேரங்களில் அலோபதியை நாடுவதில் தவறில்லை. `ஷேரிங்’ அதிகமாக போக வேண்டும், அதிகமாக `லைக்’ வாங்க வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்புவது சரியல்ல” என்றார்.

இது குறித்து பல் மருத்துவர் டாக்டர் எம்.எஸ்.ரவி வர்மாவிடம் பேசினோம். “எத்தனை பேருக்கு இப்படி குணமாகி உள்ளது… அவர்களுக்கு குணமானது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” என்று கேட்ட அவர், தொடர்ந்து பேசினார். 

“பல் எனாமல் என்பது நம்முடைய உடலிலேயே மிகவும் கடினமான பொருள். மனித உடலில் குறிப்பிட்ட சதவிகிதம் தண்ணீர் உள்ளது. எனாமலில் மட்டும்தான் தண்ணீர் உள்ளிட்டவை மிகமிகக் குறைவு. எனாமலில் 96 சதவிகித தாதுஉப்பு உள்ளது. மனித பல்லைச் சுற்றி பாதுகாப்பாக இந்த எனாமல் உள்ளது. இதற்கு உள்ளேதான் டென்டின் எனப்படும் பல் உள்ளது. இதில் 45 சதவிகிதம் hydroxylapatite என்ற வேதிப் பொருளாலும் 33 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களும், 22 சதவிகிதம் தண்ணீராலும் ஆனது. 

Dr Ravi.JPG

புகைப்படம்: டாக்டர் எம்.எஸ்.ரவி வர்மா, பல் மருத்துவர்

எனாமல் அளவுக்கு இதனால் டெக்டிக் உறுதியானது இல்லை. அமிலம் மற்றும் பாக்டீரியா தாக்குதல் காரணமாக எனாமல் சிதைவடைய ஆரம்பிக்கிறது. இதற்கு உணவு, பல் பராமரிப்பு, எச்சிலின் தன்மை என்று பல காரணங்கள் உள்ளன.  இப்படி சிதைவடையும்போது பல் சொத்தை ஏற்படுகிறது. இதை சரிபார்க்க அல்லது கட்டுப்படுத்த சொத்தை ஏற்பட்ட பகுதியை அகற்றிவிட்டு, அதற்கு பதில் செராமிக் போன்ற மெட்டீரியல்களை பயன்படுத்தி அதை அடைக்க வேண்டும். ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் பல் சிதைவை அகற்றும் என்பதற்கோ, சிதைவடைந்த பல்லை சீர் செய்யும் என்பதற்கோ எந்த ஒரு ஆய்வு முடிவும் இல்லை” என்றார்.

நம்முடைய ஆய்வில், சின்ன வெங்காயம் – நல்லெண்ணெய் பல் சொத்தையை அகற்றும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மூலிகை ஆய்வாளர் இந்த தகவல் தவறானது, மூலிகை மருத்துவத்தின் மீது உள்ள நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த பதிவு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

பல் மருத்துவர் இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சின்ன வெங்காயம் சாறு – நல்லெண்ணெய் கலந்து பல் சொத்தை மீது வைத்தால் குணமாகும் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சொத்தைப்பல்லை சரியாக்கும் வெங்காயம் – நல்லெண்ணெய்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False