தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த சூரிய ஒளியில் இயங்கும் கார்: உண்மை என்ன?

கல்வி தமிழகம்

‘’தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த சூரிய ஒளியில் இயங்கும் கார்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Post Link Archived Link

அஜித் குமார்

என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த ஜூன் 1, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் காருடன் சேர்ந்து குழுவாக நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ‘’சூரிய ஒ ளியில் சோளர் மூலம் காரை இயக்கும் நுட்பத்தை தமிழ் நாட்டு மாணவர் கண்டு பிடித்துள்ளனர். வாழ்த்துக்கள். முடந்தால் #ஷேர் பண்ணுங்க,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை பார்த்தாலே அதில் Manipal என லோகோ ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இது கர்நாடகா மாநிலம், உடுப்பியில் உள்ள கல்வி நிறுவனமாகும்.

இதைத்தொடர்ந்து, மேலே உள்ள புகைப்படத்தை Yandex இணையதளத்தில் பதிவேற்றி, அதனை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இதுதொடர்பான புகைப்படங்கள் நிறைய காண கிடைத்தன. 

இதன்படி, கர்நாடகாவில் உள்ள Manipal Institute of Technology மாணவர்கள் கடந்த 2015ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற QuEST Ingenium 2015 எனும் நிகழ்வில் சூரிய ஒளி சக்தியில் இயங்கக்கூடிய கார் ஒன்றை வடிவமைத்து அறிமுகம் செய்திருக்கின்றனர். இதற்காக, அவர்களுக்கு அந்த நிகழ்வில் முதல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

MangaloreToday News Link Archived Link 

இதே தகவல் QuEST Ingenium அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

QuEST Ingenium 2015 Linkஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர்கள் தமிழக மாணவர்கள் இல்லை. அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் செயல்படும் மணிபால் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
2) அவர்கள் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் காரை கண்டுபிடித்தது நடப்பாண்டில் இல்லை. அது நடந்தது 2015ம் ஆண்டாகும்.
3) பழைய புகைப்படத்தை எடுத்து பகிர்ந்துள்ளதோடு, அதில் இருப்பவர்கள் தமிழக மாணவர்கள் என தவறான தகவலை கூறி ஃபேஸ்புக் வாசகர்களை குழப்பியுள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான தகவலை கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த சூரிய ஒளியில் இயங்கும் கார்: உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •