
திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயில் பசு, காளையின் பரிதாப நிலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலின் உண்மை தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

யாரோ பகிர்ந்த ஃபேஸ்புக் பதிவை, ஸ்கிரீன் ஷாட் எடுத்து புகைப்படமாக இந்த பதிவு பகிர்ந்தது போல் உள்ளது. எலும்பும் தோலுமாக இருக்கும் காளை மாட்டின் அருகில் சிலர் நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.
அந்த படத்தின் மேல் பகுதியில், “கேரளா பத்மநாப ஸ்வாமி கோயில் பசு… காளையின் நிலை பரிதாபம். உலகத்திலேயே மாட்டுக்கறி தின்பதில் முதலிடம் வகிக்கும் சேட்டன்களுக்குப் பசுமாட்டின் வயிற்றெரிச்சல் எங்கே புரியப்போகின்றது?
பல்லாயிரக்கணக்கான கோடிகள் சொத்துள்ள ஆலயத்தின் கோயில் காளையின் நிலைமையை பாரீர்… ஜீவ காருண்யம் மறந்த மனிதன்” என்று உள்ளது.
இந்த பதிவை 2019 ஜூலை 11ம் தேதி முத்து கிருஷ்ணன் என்பவர் பகிர்ந்துள்ளார்.
உண்மை அறிவோம்:
பத்மநாப ஸ்வாமி கோவில் பசு என்று குறிப்பிட்டுள்ளனர். கோவிலை நிர்வகிப்பது கேரள தேவசம் போர்டு… இதன் மூலம் ஆட்சியாளர்களை குற்றம்சாட்டுவது போல பதிவு இருந்தது.
இந்த பசுக்களை கோவில் நிர்வாகம்தான் பராமரிக்கிறதா, பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், “பத்மநாப ஸ்வாமி கோவில் அருகே உள்ள பத்மநாபசுவாமி கோவில் கோசாலா டிரஸ்ட் என்ற தனியார் அமைப்புக்கு சொந்தமான பசு மடத்தில் உள்ள பசுக்களின் பரிதாப நிலை” என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியில் பத்மநாப சுவாமி கோவிலுக்கு சொந்தமான பசுமடம் என்று குறிப்பிடவில்லை.
மேலும் அந்த செய்தியில், “பசுக்களின் நிலை பற்றி தகவல் அறிந்த மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பார்வையிட்டு, பசுக்களுக்கு உடனடியாக உணவு வழங்க தீவனத்தை அனுப்பி வைத்தார். தேவை எனில், அந்த பசுக்களைக் கோவில் நிர்வாகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரையும் அறிவுறுத்தியுள்ளார்” என்று இருந்தது.
மற்றொரு செய்தியில், கேரள கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராஜூ, பசு மடத்திற்கு வந்து பசுக்களை பார்வையிட்ட படத்தைப் பகிர்ந்திருந்தனர்.
அந்த செய்தியில், 15 பை ப்ரீமியம் கால்நடை உணவுகள் பசு மடத்திற்கு வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். அமைச்சரின் பேட்டியில், “இந்த பசுமடம் பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த பசுக்களுக்கு வேண்டிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அறிக்கை அடிப்படையில் இந்த மடத்தை அரசு கையகப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த பசு மடம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு நாட்டுப் பசும்பால் கிடைப்பதை உறுதி இந்த பசு மடம் அறக்கட்டளை 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது தெரிந்தது. கர்நாடக மாநிலம் ஶ்ரீராமசந்திராபுரா மடம் சார்பில் இந்த பசு மடத்துக்கு 10 நாட்டுப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பசுமடத்தை திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மற்றும் ஶ்ரீராகவேஸ்வரா பாரதி மகாஸ்வாமி ஆகியோர் தொடங்கிவைத்துள்ளனர். இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த அறக்கட்டளையை யார் நடத்துகிறார்கள் என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, பிரபல நடிகரும் திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான சுரேஷ் கோபி இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக இருப்பதாக நியூஸ்மினிட் என்ற ஆங்கில செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது நமக்குக் கிடைத்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பரிதாப நிலையில் உள்ள பசுக்கள் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில், கேரள தேவசம்போர்டுக்கு சொந்தமான பசுக்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பா.ஜ.க எம்.பி-யும் நடிகருமான சுரேஷ் கோபி உறுப்பினராக உள்ள தனியார் கோசாலை அறக்கட்டளை சார்பில் இந்த பசுமடம் நடத்தப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கேரள பத்மநாபஸ்வாமி கோவிலுக்கு சொந்தமான பசுக்கள் என்பது தவறான தகவல் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பசுக்களின் பரிதாப புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
