
”சிறுவன் சுஜித்தை காப்பாற்ற நூறு முறை பால் தினகரனுக்கு போன் செய்தேன், ஆனால் அவர் வரவில்லை” என்று சுஜித்தின் தாய் பேட்டி அளித்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், ”என் மகனை காப்பாற்ற நூறு முறை பால் தினகரனுக்கு போன் செய்தேன். பிராடு பாதிரி வரவே இல்லை. சுஜித்தின் தாய் வேதனை” என்று போட்டோஷாப்பில் டைப் செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவை Anand Muruga என்பவர் 2019 அக்டோபர் 30ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மணப்பாறை அருகே சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுவன் உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்று சாதி, மதம் கடந்து பலரும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். ஆனால், சமூக ஊடகங்களில் சாதி, மதத்தை வைத்து சிலர் விஷமத்தனமாக பதிவிட்டது அருவருப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மதத்தை இணைத்து பதிவுகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், சுஜித்தின் தாயார், குழந்தையை மீட்டுத் தரும்படி பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனை தொடர்புகொள்ள முயன்றதாகவும், ஆனால் அவர் வரவில்லை என்று கூறியதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தது போல போட்டோ கார்டை உருவாக்கியுள்ளனர். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
புதிய தலைமுறையில் சுஜித் தாயார் பேட்டி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அக்டோபர் 29, 2019 அன்று புதிய தலைமுறையில் சுஜித் தாய் கலா மேரி பேட்டி வெளியாகி இருந்தது. அதில், ”குழந்தையை காப்பாற்ற எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பாறை இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை. சுஜித்துக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றின் மீது ஒரு கோவில் கட்ட வேண்டும் என்பது என் ஆசை” என்றார். எந்த இடத்திலும், ‘பால் தினகரனுக்கு போன் செய்தேன். ஆனால் அவர் வரவில்லை’ என்று கூறவில்லை.
Archived Link 1 | Article Link | Archived Link 2 |
அதே நேரத்தில், குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தபோது குழந்தைக்காக பால் தினகரன் பிரார்த்தனை செய்தது தொடர்பான செய்தியும் நமக்கு கிடைத்தது. தந்தி டி.வி-க்கு பேட்டி அளித்த பால் தினகரன், குழந்தைக்காக பிரார்த்தனை செய்கிறார். இதை பால் தினகரன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அக்டோபர் 29ம் தேதி வெளியிட்டுள்ளார்.

Facebook Link | Archived Link |
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுஜித்தை காப்பாற்ற பால் தினகரனை அழைத்தேன் அவர் வரவில்லை என்று சுஜித்தின் தாய் கலா மேரி கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பால் தினகரன் உதவவில்லை: சுஜித் தாய் வேதனை தெரிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
