
தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்படியும் கரக்பூர் ஐ.ஐ.டி-யில் நடந்த மாணவர்களுடனான சந்திப்பின்போது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Archived link 2
சுந்தர் பிச்சையின் கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர் சந்திப்பு படத்தை பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “எனக்கு இந்தி தெரியாது. கேள்வியை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டும் கேளுங்கள். கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை” என்று எழுதப்பட்டுள்ளது.
நிலைத்தகவலில், அவரைப் பற்றி சற்று விரிவாக குறிப்பிட்டுள்ளனர். கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர் சந்திப்பு பற்றிய இடத்தில், “சுந்தர் பிச்சை, அவர் படித்த கோரக்பூர் ஐ.ஐ.டிக்கு சென்று உரையாற்றிய போது, அவரிடம் மாணவர்கள் ஹிந்தியில் கேள்வி கேட்டுள்ளனர்.
அப்போது, தனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர வேறு எதுவும் தெரியாது. இந்த இரண்டு மொழிகளில் கேளுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அங்குள்ள மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, புதிய தகவல்கள்… New information… என்ற ஃபேஸ்புக் குழு பக்கத்தில் Muthukrishnan என்பவர் 2019 ஜூன் 25ம் தேதி பகிர்ந்துள்ளார். இது உண்மை என்று கருதி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐ.ஐ.டி கரக்பூரில் நடந்த மாணவர்களுடனான சந்திப்பின்போது அவர் பங்கேற்றுப் பேசினார். அப்போது, பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அந்த நிகழ்ச்சியின்போது, சுந்தர் பிச்சையிடம் மாணவர்கள் இந்தியில் கேள்வி கேட்டதாகவும், அதற்கு அவர் எனக்கு இந்தி தெரியாது என்று கூறியதாகவும் மேற்கண்ட பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
இது உண்மையா என்று, தேடினோம். அப்போது நமக்கு இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்திகள் கிடைத்தன. என்.டி.டி.வி வெளியிட்ட செய்தியில், “நான் சென்னையில் இருந்து இந்த கல்லூரிக்கு வந்த போது எனக்கு இந்தி தெரியாது. பின்னர் கல்லூரியில் இந்தி கற்றுக்கொண்டேன்” என்று பேசியதாக குறிப்பிட்டுள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில், “சென்னையில் இருந்து இங்கு கல்லூரிக்கு வந்த புதிதில், இரண்டு வாரம் இருக்கும். நான் பள்ளியில் இந்தி கற்றுக்கொண்டேன்… ஆனால் பேசியது இல்லை. மற்றவர்கள் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டிருப்பேன். எப்படி மற்றவர்கள் பேசுகிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருப்பேன். ஒருநாள் மெஸ்ஸில் ஒரு நபரைப் பார்த்து “அபே சாலே” என்று அழைத்தேன். என்னுடைய முதல் சில வாரங்களில் இப்படித்தான் அழைப்பார்கள் என்று நானாக தெரிந்துகொண்டேன். அதன்பிறகு மெஸ் தற்காலிகமாக மூடப்படும் அளவுக்கு அது பிரச்னையானது” என்று பேசியதாக குறிப்பிட்டிருந்தனர்.
சுந்தர் பிச்சை பேசிய வீடியோவை ஆய்வு செய்தோம். அதில், 5.35வது நிமிடத்தில் இந்தியை பள்ளியில் கற்றுக்கொண்டேன் என்ற சுந்தர் பிச்சை பேசியது நமக்கு கிடைத்தது. இதன் மூலம், எனக்கு இந்தி தெரியாது என்று சுந்தர் பிச்சை கூறவில்லை என்பது உறுதியானது.
அந்த முழு வீடியோவையும் பார்த்தோம்… அதில் ஏற்கனவே யார் கேள்வி கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. சுந்தர் பிச்சையை பேட்டி எடுத்தவர் யார் கேள்வி கேட்க வேண்டும் என்று பெயரை அறிவிக்கிறார். அவர்கள் எழுந்து கேள்வி கேட்டனர். அனைவரும் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்டனர்.
இந்தியில் கேள்வி கேட்டு அதற்கு அவர் ஆங்கிலம் அல்லது தமிழில் கேள்வி கேட்கச் சொன்னாரா என்று தேடினோம். தமிழில் கேள்வி கேட்கச் சொல்லியிருந்தால் அது தமிழ் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் ‘நான் சென்னைவாசி, ஹிந்தி நஹி மாலும்!’- கூகுள் CEO சுந்தர் பிச்சை என்று விகடன் வெளியிட்ட செய்தி கிடைத்தது. செய்தியைப் படித்த போது, கரக்பூர் நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பேசியதையே குறிப்பிட்டுள்ளனர். நான் சென்னையில் இருந்து வந்த போது இந்தி சரியாக தெரியாது என்று குறிப்பிட்டதை வைத்து தலைப்பிட்டுள்ளனர். உண்மையில் சுந்தர் பிச்சை, பள்ளியில் இந்தி படித்தேன். அவ்வளவாக பேசியதில்லை என்றே குறிப்பிட்டிருந்தார்.
நம்முடைய ஆய்வில்,
பள்ளியில் இந்தி படித்தேன், ஆனால் அதிகம் பேசியது இல்லை என்று சுந்தர் பிச்சை கூறியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
முழு வீடியோவிலும் யாரும் அவரிடம் இந்தியில் கேள்வி எழுப்பவில்லை என்பது தெரிந்தது.
இந்தியில் கேள்வி எழுப்பியதற்கு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்படி சுந்தர் பிச்சை கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“இந்தி தெரியாது என்ற சுந்தர் பிச்சை!” – கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர் உரையாடலில் நடந்தது என்ன?
Fact Check By: Praveen KumarResult: False

Thank you for your kind information.