
‘’மொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Video Link |
இந்த Page ஐ இங்க லைக் பண்ணுங்க ப்ளிஸ். எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், கண்ணில் இருந்து நீளமான ஒரு மெல்லிய புழுவை கத்தரிக்கோல் மூலமாக அகற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் மேலே, ‘’ அதிக நேரம் மொபைல் போனில் விளையாட்டால் கண்களுக்குள் படரும் ஒட்டுண்ணி என்னும் புழுவை அகற்றும் காட்சி. அவசியம் பாருங்கள். இதை தயவு செயது அனைவருடைய குரூப்க்கும் அனுப்பவும். அனுப்பியவர்க்கு கோடி நன்றி…பகிர்வது மட்டும் இன்றி குழந்தைகளுக்கு போட்டு காட்டி விளக்கவும் நண்பர்களே,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அதிகப்படியான மொபைல் பயன்பாடு நமது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், அதற்காக, கண்ணில் புழு ஏற்படுத்துமா என்பது பற்றி நாமும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அதனை வைத்து, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். நீண்ட தேடலுக்குப் பின், நமக்கு இந்த கண்ணில் புழு உள்ள வீடியோ பற்றிய ஆதாரம் ஒன்று கிடைத்தது. இது 5 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வீடியோவாகும்.
இதன்படி, indiavideodotorg எனும் யூ டியூப் சேனல் பகிர்ந்துள்ள மேற்கண்ட வீடியோவில், கண்ணில் இருந்து புழுவை முதலில் நீக்குகின்றனர். அதன் பிறகு, கேரளாவைச் சேர்ந்த Mulamootil Eye Hospital டாக்டர் Ashley Thomas Jacob என்பவர் பேசுகிறார். அவர் கூறுகையில், ‘’இது மனித கண்ணில் லோவா லோவா புழுவை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கிய காட்சியாகும். இந்த புழு, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பரவுகிறது. சதுப்பு நில அல்லது மான் ஈக்கள் மனித உடலின் தோலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தி, அதன் மூலமாக புழுவை பரப்புகிறது. இதில் இருந்து புழுக்கள் வளர்ந்து, கண்கள், நுரையீரல், இதயம் மற்றும் தோலுக்கு அடியில் தங்கிவிடுகின்றன,’’ என, அவர் கூறுகிறார்.
இதேபோல, 2012ம் ஆண்டில், ஒரு வீடியோ யூ டியுப்பில் பகிரப்பட்டுள்ளது. அதுவும், இந்த லோவா லோவா புழு பற்றியதுதான். அந்த வீடியோ ஆதாரத்திற்காகக் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வகை புழுவின் மற்றொரு பெயரே கண்புழு என்பதுதான். இதுபற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, இது ஒரு வகை தொற்று காரணமாக ஏற்படும் பாதிப்பு என தெளிவாகிறது. அத்துடன், ஃபேஸ்புக் வதந்திகளில் கூறப்படுவதுபோல, மொபைல் ஃபோன் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும் என்பதில் உண்மையில்லை. அதேசமயம், மொபைல் ஃபோன் பயன்படுத்துவது நல்லது என்று முழுதாகச் சொல்லிவிட முடியாது. அதிலும் சில வகை ஆபத்துகள் உள்ளன.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மொபைல் ஃபோனில் கேம் விளையாடினால் கண்ணில் புழு வரும்: வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
