ரயில்வே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தினாரா ஜெகன்மோகன் ரெட்டி?

அரசியல் சமூக ஊடகம்

‘’ரயில்வே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கிய ஜெகன் மோகன் ரெட்டி,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மரணகலாய் எனும் ஃபேஸ்புக் ஐடி அக்டோபர் 11, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகைப்படத்திற்கு, பெண்கள் பாலாபிஷேகம் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ ரயில்வே துப்புரவு பணியாளர்கள் சம்பளம் Rs 6,000 இருந்து 18,000. மாற்றப்பட்டுள்ளது,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தியை மீண்டும் ஒருமுறை பொறுமையாகப் படித்து பார்த்தாலே உண்மை விளங்கும். இந்தியாவைப் பொறுத்தவரையிலும், ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தும் அதிகாரமோ அல்லது ரயில்வே துறையை நிர்வகிக்கும் பொறுப்போ மாநில அரசுகளின் வசம் கிடையாது. இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல், ஃபேஸ்புக்கில் ஒரு ஐடி ஆரம்பித்து, அதற்கு ‘மரணகலாய்‘ எனப் பெயரிட்டு, இப்படியான வதந்தியை பகிர்ந்துள்ளனர்.

இதைவிட கொடுமை, இந்த ஃபேஸ்புக் செய்தியை அப்படியே பலரும் காப்பி அடித்து, மாஸ், கொல குத்து, என்றெல்லாம் இஷ்டத்திற்கு அடைமொழி கொடுத்து ஷேர் செய்ததையும் காண நேரிட்டது. 

இதன்படி, ஆந்திராவில் ஏதேனும் உண்மையிலேயே ஜெகன் மோகன் ரெட்டி சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளாரா என தகவல் தேடினோம். அப்போது கடந்த ஜூன் மாதம், ஆந்திராவில் பணிபுரியும் ஆஷா எனப்படும் (Accredited Social Health Activist) கிராமங்களில் சுகாதார சேவை செய்யும் பெண்களுக்கு ஆந்திர அரசு சார்பாக தரப்படும் ஊதியத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக, விவரம் தெரியவந்தது. இதுபற்றி விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதையடுத்து, ஆந்திர அரசுக்கும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் நன்றி தெரிவித்து ஆஷா ஊழியர்கள் பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றுதான் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசின் திட்டமான இதில், பெண் ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். இதுபற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

உண்மை இப்படியிருக்க, ஃபேஸ்புக்கில் லைக், ஷேர் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தவறான வதந்தியை பகிர்வதைச் சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, மு.க.ஸ்டாலின், மோடி, சீமான், ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பெயரில் முற்றிலும் தொடர்பில்லாத வதந்திகளை பரப்புவது அதிகளவில் உள்ளது. இதில் ஒரு வதந்திதான் மேற்கண்ட ஃபேஸ்புக் தகவலும்.

ஆஷா ஊழியர்களுக்கு ஜூன் மாதத்தில் சம்பளம் உயர்த்தப்பட்ட தகவலை தற்போது புதிதுபோல பகிர்ந்து, ரயில்வே ஊழியர்கள் என தவறாக அடையாளப்படுத்தி வாசகர்களை குழப்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:ரயில்வே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தினாரா ஜெகன்மோகன் ரெட்டி?

Fact Check By: Pankaj Iyer 

Result: False