
‘’ஏசி ஆடிட்டோரியத்தில் குப்பையை கொட்டி அள்ளுவது போல விளம்பரம் செய்த பாஜக கோஷ்டி,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
Dhanaraj Palanisamy என்பவர் இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை செப்டம்பர் 12, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை இணைத்து, அதன் மேலே, ‘’வெளிய கிடந்த குப்பையை எல்லாம் அள்ளிட்டு வந்து ஏ/சி ஆடிட்டோரியத்துக்கு உள்ள கொண்டுவந்து கொட்டி குப்பைய அள்ளுற மாதிரி டக்கால்ட்டி பன்ற ஒரே கோஷ்ட்டி இவங்களாதா இருக்கும்.. பாசிச பாஜக,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த வீடியோவை பார்க்கும்போது, அரசு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றதுபோல தெரிகிறது. அவர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தி சில செயல்முறை விளக்கங்களை மோடிக்கு செய்து காட்டுகின்றனர். ஆனால், இந்த ஃபேஸ்புக் பதிவிலோ, தெருவில் கிடந்த குப்பைகளை ஏசி ஆடிட்டோரியத்தில் கொட்டி கேமிராவுக்கு போஸ் கொடுத்து ஏமாற்றுகிறார்கள், எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்பேரில், இந்த வீடியோவின் பின்னணி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, குறிப்பிட்ட வீடியோ, கடந்த செப்டம்பர் 11ம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ஒன்று என விவரம் கிடைத்தது.
Swachhata Hi Seva 2019 எனப் பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக்கை பிரித்தெடுத்து அவற்றை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் நேரம் செலவிட்டார். அந்த பணியை எப்படி செய்கிறார்கள் என்பதற்கான செயல்முறை விளக்கத்தையும் மோடி கேட்டறிந்தார். மேலும், நாடு முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பை செயல்படுத்த, நாட்டு மக்கள் ஒத்துழைப்பு தரும்படியும் அழைப்பு விடுத்திருந்தார்.
இதுபற்றிய செய்தி விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
PIB press release Link | NDTV news link |
இதுதவிர, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே மேற்கண்ட நிகழ்ச்சி பற்றி முழு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதனையும் ஆதாரத்திற்காக, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற வீடியோவை, ‘’விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு குப்பையை தேவையின்றி ஏசி ஆடிட்டோரியத்தில் அள்ளி போட்டுக் கொண்டு பாஜக கோஷ்டி போஸ் கொடுக்கிறார்கள்,’’ என தவறான தகவலை பரப்பியுள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பற்றிய தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஏசி ஆடிட்டோரியத்தில் குப்பையை கொட்டி அள்ளுவது போல விளம்பரம் செய்தாரா மோடி?
Fact Check By: Pankaj IyerResult: False
