
‘’திருச்சி அருகே வறுமையால் ஆடு மேய்க்கும் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவி. முடிந்தால் ஷேர் செய்து அவருக்கு உதவியை பெற்றுத்தாருங்கள்,’’ என்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
திருச்சி அருகில் வறுமையால் ஆடு மேய்க்கும் MBBS முதல் ஆண்டு மாணவி.
உங்களால் முடிந்தால் #Share செய்து உதவியை பெற்றுக்குடுங்கள்.
இளம் பெண் ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறார். இயக்குநர் சசிகுமார் படம் மற்றும் பெயரில் உள்ள ஃபேஸ்புக் குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2019 பிப்ரவரி 2ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். இந்த பெண் யார், எப்படி உதவி செய்வது என்று எந்த தகவலும் இல்லை. ஆனால், உங்களால் முடிந்தால் ஷேர் செய்து உதவியை பெற்றுத்தாருங்கள் என்று கூறப்பட்டுள்ளதால், ஒரு ஷேர் தானே என்று நினைத்து கிட்டத்தட்ட 48 ஆயிரம் பேர் இந்த பதிவை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
படத்தில் இருக்கும் ஆடு மேய்க்கும் பெண் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவி என்று தெரிவித்துள்ளனர். திருச்சி அருகில் வறுமையால் வாடும் பெண் என்று மட்டும் உள்ளது. அவரது முகவரி, உதவி செய்வது தொடர்பாக எந்த ஒரு விவரமும் இல்லை.
இதனால், இந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இந்த ஆடு மேய்க்கும் பெண் தொடர்பாக வேறு சில வதந்திகள் பரவியது தெரிந்தது. மேலும், இந்த பெண்ணின் உண்மை நிலையும் தெரிந்தது.

நீட் தேர்வால் ஏழை மாணவிக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது என்று வதந்தி ஒன்று பரவியுள்ளது. அது பற்றி மெய்பொருள் என்ற இணையம் உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தி அது பொய் என்று நிரூபித்துள்ளது. இந்த செய்தியில் இந்த பெண் பற்றி பல விவரங்கள் நமக்குக் கிடைத்தன. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த பெண் திருச்சி மாவட்டம் மேலக்குழுமணியைச் சேர்ந்த பிருந்தா தேவி. இவர் எம்.பி.பி.எஸ் படிக்கிறார். ஆனால், முதலாம் ஆண்டு இல்லை. 2016ம் ஆண்டு இவருக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், முதலாண்டு கல்வி கட்டணத்தைக் கூட அவரால் கட்ட முடியவில்லை. கலந்தாய்வுக்கே பள்ளி ஆசிரியர்கள், ஊர்மக்கள் சேர்ந்துதான் பணம் கொடுத்து அனுப்பியதாக 2016 ஜூலை 15ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து அவருக்கு உதவிகள் வரத் தொடங்கின. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, மாணவி பிருந்தா தேவி மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து உதவி செய்துள்ளார். இது தொடர்பாக தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.
உண்மை இப்படி இருக்க, பிருந்தா தேவி தற்போதுதான் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படிப்பது போலவும் அவருக்கு உதவிகள் கிடைக்கும் வரை பகிருங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த ஃபேஸ்புக் பதிவில் உண்மையும், பொய்யும் கலந்துள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.
இது இயக்குநர் சசிகுமாரின் உண்மையான ஃபேஸ்புக் பக்கம் போல இல்லை. லைக், ஷேர் பெறுவதற்காக பல தவறான பதிவுகள் இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் கலந்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:வறுமையில் ஆடு மேய்க்கிறாரா எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு மாணவி?
Fact Check By: Praveen KumarResult: Mixture
