அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்து மத வழிபாடு நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

இந்து மத வழிபாடு நடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் வழிபாட்டை நடத்துகின்றனர். நிலைத் தகவலில், "நமது ஹிந்து தர்மம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்றுள்ளது. விரைவில் உலகம் முழுவதும் செல்லட்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Puttaraj Gowda என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 1ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை இந்து தர்மம் சென்றுள்ளது என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவில் இப்படி குடியரசு தலைவர் மாளிகையில் வேறு மத நிகழ்வு நடத்தப்பட்டால் என்ன மாதிரியான விமர்சனங்கள் எழுந்திருக்கும் என்ற கேள்வியுடன் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு நடத்தினோம்.

இந்த வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டில் இருந்து இந்த வீடியோ ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பதை காண முடிந்தது.

Svns Bhakthi Channel என்ற யூடியூப் சேனலில் இந்த வீடியோ குரோஷியாவில் உலக அமைதிக்காக நடந்த ஶ்ரீ ருத்ரம் மற்றும் சமகம் (Shri Rudram and Chamakam) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஐரோப்பிய வேத கூட்டமைப்பு இதை நடத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அமைப்பின் இணையதளத்தை கூகுளில் தேடி கண்டுபிடித்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

அந்த இணையதளத்தில் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 3 மற்றும் 4ம் தேதிகளில் குரேஷியாவின் Zagreb என்ற ஊரில் இந்த ருத்ரம் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள காட்சிகள் அந்த புகைப்பட தொகுப்பிலும் இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: vedaunion.org I Archive

நம்முடைய ஆய்வில் வெள்ளை மாளிகையில் இந்து மத வழிபாடு நடந்தது என்று பரவும் வீடியோ குரோஷியாவில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான தகவலைக் கொண்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குரேஷியா நாட்டில் நடந்த உலக அமைதிக்கான வழிபாட்டு வீடியோவை எடுத்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்தது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வெள்ளை மாளிகையில் இந்து மத வழிபாடு என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False