FACT CHECK: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான், இம்ரான்கான் ஆதரவு கோஷமா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்க என்று விவசாயிகள் கோஷம் எழுப்பியதாக, ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சீக்கியர்கள் காலிஸ்தான் ஜிந்தாபாத், இம்ரான்கான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இம்ரான் வாழ்க, காலிஸ்தான் வேண்டும், பாகிஸ்தான் வாழ்க என்று போராடும் இவர்களா விவசாயிகள் தேச விரோதிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை தம்பா ஜெயமாருதி ஜி என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 டிசம்பர் 17ம் தேதி பகிர்ந்துள்ளார்.

இவரைப் போல ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மூன்று விவசாயிகள் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்துக்கு வன்முறை சாயம் பூச ஒரு சிலர் தீவிரமாக முயற்சித்து வருவதை சமூக ஊடக பதிவுகள் காட்டுகின்றன. பழைய வீடியோ, புகைப்படங்களை எல்லாம் எடுத்துவந்து தற்போது டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டது என்று விஷமத்தனமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றவர்களை எல்லாம் தேச விரோதிகளாக சித்தரித்திருந்தனர். எனவே, இந்த வீடியோ விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை கடந்த 2019ம் ஆண்டில் பாகிஸ்தானின் கராச்சியை சார்ந்த ஊடகம் ஒன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது தெரிந்தது. எங்கே, எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது, எதற்காக இந்த போராட்டம் என எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை. 

அசல் பதிவைக் காண: Facebook I Archive

விவசாயிகள் போராட்டம் என்பது மத்திய அரசு கடந்த 2020 செப்டம்பர் மாதம் வேளாண் மசோதாவைக் கொண்டு வந்ததிலிருந்து தொடங்கியது. ஆனால், இந்த வீடியோ 2019ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு இருந்ததால் இதற்கும் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியானது.

தொடர்ந்து தேடியபோது இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் உள்ள பதாகைகளில் அமெரிக்கக் கொடி தெரிந்தது. பேனர் ஒன்றில் நியூ யார்க் என்று எழுதப்பட்டு இருந்தது. எனவே, அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த போராட்டம் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

நியூயார்க்கில் நடந்த சீக்கியர்கள் போராட்டம் தொடர்பாக கூகுள், யூடியூபில் தேடியபோது பல போராட்டங்களின் படங்கள், வீடியோக்கள் கிடைத்தன. இம்ரான்கான் வாழ்க என்று சீக்கியர்கள் கோஷம் எழுப்பியது அடிப்படையில் கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம்.

அப்போது 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய போர் விமானம் பாகிஸ்தானில் நுழைந்தபோது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீக்கியர்கள் போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பல வீடியோக்கள் கிடைத்தன.

நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ நியூயார்க்கில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது உறுதியாகிறது. அதே நேரத்தில் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடங்குவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே இந்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், டெல்லியில் 2020 டிசம்பரில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்க என்று கோஷம் எழுப்பியதாக பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான், இம்ரான்கான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது என்று பகிரப்படும் வீடியோ அமெரிக்காவில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான், இம்ரான்கான் ஆதரவு கோஷமா?

Fact Check By: Chendur Pandian 

Result: False