
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த போது உள்ளே விடாமல் வெளியே நின்று சாமி கும்பிட வைத்தார்கள் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நியூஸ் 7 வெளியிட்ட, அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வரும் செய்தியைப் பகிர்ந்துள்ளனர். அதன் கீழ், நாட்டாமை படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் காட்சியை வைத்துள்ளனர். அதில் கவுண்ட மணி படத்தின் மீது மக்கள் என்றும் செந்தில் படத்தின் மீது ராம்நாத் கோவிந்த் என்றும் எழுதப்பட்டுள்ளது.
“ஏற்கனவே நீ ராமேஸ்வரம் வந்தப்ப உன்னய கோயிலுக்குள்ள விடாம வெளியில நின்னு சாமி கும்புட வச்சானுங்க. இப்ப நீ எந்த ததரியத்துல காஞ்சிபுரத்துக்கு சாமி கும்புட வர்ற?” என்று ராம்நாத் கோவிந்தைப் பார்த்து மக்கள் கேட்பது போல படத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த பதிவை, அமாவாச – Naga Raja Chozhan MA என்ற ஃபேஸ்புக் குழுவில் 2019 ஜூலை 12ம் தேதி வெளியிட்டுள்ளனர். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதரை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூலை 12, 2019 அன்று தரிசித்துச் சென்றார். அவர் வருவதற்கு முன்பாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ராமேஸ்வரம் கோவிலுக்கு ராம்நாத் கோவிந்த் சென்ற போது அவரை வாசலில் நிற்க வைத்ததாக குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று கூகுளில் தேடினோம்.
2017 டிசம்பர் 23ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ராமேஸ்வரம் வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலிருந்து கலசங்களில் சேகரித்த புனித நீர் வழங்கப்பட்டது. அதன் பின்னர் சுவாமி மற்றும் அம்மன் சன்னதிக்குச் சென்று அவர் தரிசனம் செய்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இது தொடர்பாக குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டு இருந்தது. அதில், அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்படுவது முதல், கோவில் ஒவ்வொரு சன்னிதானத்திலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்படுவது இடம் பெற்று இருந்தது.
ராமேஸ்வரம் கோவிலுக்குள் அனுமதிக்காமல் ராம்நாத் கோவிந்த் அவமரியாதை செய்யப்பட்டாரா என்று கூகுளில் தேடினோம். அப்போது பூரி ஜகந்நாதர் கோவிலில் ராம்நாத் கோவிந்த் அவமரியாதை செய்யப்பட்ட தகவல் நமக்குக் கிடைத்தது.

இது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகையிலிருந்தே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் அனுப்பப்பட்டது. ஆனால், இதை கோவில் அர்ச்சகர்கள் மறுத்த செய்தியும் நமக்குக் கிடைத்தது. தொடர்ந்து தேடியபோது, ஜகந்நாதர் கோவில் வாசலில் நின்று குடியரசு தலைவர் சாமி கும்பிடும் வீடியோக்களும் கிடைத்தன.
நம்முடைய ஆய்வில்,
ராமேஸ்வரம் கோவிலில் ராம்நாத் கோவிந்த் வழிபட்டது தொடர்பான செய்தி மற்றும் வீடியோ கிடைத்துள்ளது.
ராமேஸ்வரம் கோவிலில் குடியரசு தலைவர் அவமரியாதை செய்யப்பட்டார் என்று எந்த ஒரு செய்தியும் இல்லை.
பூரி ஜகந்நாதர் கோவிலில் குடியரசு தலைவருக்கு அவமரியாதை செய்யப்பட்ட செய்தி, வீடியோ கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ராமேஸ்வரம் கோவிலில் குடியரசு தலைவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“ராமேஸ்வரம் கோவிலுக்குள் குடியரசு தலைவரை அனுமதிக்கவில்லை!” –சர்ச்சையைக் கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False
