
‘’முஸ்லீம் என்ற காரணத்தால் சிறுவனுக்கு சிகிச்சை வழங்க மறுப்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link
Anand Kumar என்பவர் ஜூலை 11, 2019 அன்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பெண் ஒருவர் சிறுவனின் சடலத்தை ஏந்தி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, மேலே, ‘’ #உத்திரபிரதேசத்தில் அப்ரோஸ் என்ற 9.வயது சிறுவன் #படுகொலை. #முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக #மருத்துவம் பார்க்க மறுப்பு. #காவித்தீவிரவாதி மனசாட்சி இல்லாத மிருகம் #யோகிஅயோக்கியநாத் ஆட்சியில் தொடரும் #இனப்படுகொலைகள்,’’ என எழுதியுள்ளார்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடும் தகவல் உண்மைதானா என சந்தேகத்தின் பேரில், கூகுளில் ஆதாரம் தேடினோம். குறிப்பிட்ட புகைப்படத்தை வைத்து ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் தெரியவந்தது.

இதன்படி, குறிப்பிட்ட சம்பவம் கடந்த மே 27, 2019 அன்று உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒன்று என தெரியவந்தது. இதில், உடல்நலக் குறைவால் 9 வயது அஃப்ராஸ் என்ற சிறுவனை, ஷாஜகான் பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆனால், சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவனை மேல்கட்ட சிகிச்சைக்காக லக்னோ கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
இதன்போது, அந்த மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ் உதவியை சிறுவனின் பெற்றோர் கேட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதுபற்றி சரியான உதவி செய்யவில்லை. எனவே, நடந்தே சிறுவனை சுமந்தபடி அவனது தாய் அருகில் உள்ள மருத்துவமனை கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். எனினும், சிறிது நேரத்தில் வழியிலேயே தாயின் கரங்களில் அந்த சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டது. இதுபற்றி ஏஎன்ஐ, என்டிடிவி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுபற்றி படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.

ஆம்புலன்ஸ் கொடுத்து உதவியிருந்தால் மற்றொரு மருத்துவமனையில் அனுமதித்து சிறுவனை காப்பாற்றியிருக்கலாம் என, அவனது பெற்றோர் கூறிய நிலையில், ஷாஜகான்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இதுபற்றி விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம், ‘’அவர்கள் சிகிச்சை பெற வந்தது உண்மை. சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் லக்னோ செல்லும்படி கூறினோம். ஆனால், என்ன செய்ய வேண்டுமென எங்களுக்குத் தெரியும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், எனச் சொல்லிவிட்டு, சிறுவனை அவனது பெற்றோர் எடுத்துச் சென்றனர். எங்களிடம் வேறு எந்த உதவியும் அவர்கள் கேட்கவில்லை,’’ எனக் கூறியுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்த்தால், போதிய அக்கறை இன்றி இரு தரப்பிலும் அலட்சியமாக செயல்பட்டு சிறுவனை காப்பாற்றாமல் விட்டுவிட்டதாக, தெரியவருகிறது. ஆனால், எந்த இடத்திலும் சிறுவன் ஒரு முஸ்லீம் என்பதால் யாரும் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அது இந்திய அளவில் பேசப்படும் விசயமாக மாறியிருக்கும்.
உண்மை எதுவும் தெரியாமல், முஸ்லீம் என்ற காரணத்தால், அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் யோகி ஆதித்யநாத் அரசு கொன்றுவிட்டதாகக் கூறி, இஷ்டத்திற்கு மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, அவர் கூறியுள்ள தகவல்கள் தவறானவை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:முஸ்லீம் என்பதால் உத்தரப் பிரதேச சிறுவனுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
