“அதானி மனைவியை வணங்கிய மோடி!” – ஃபேஸ்புக் படம் சொல்லும் கதை உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

பிரதமர் மோடி, அதானியின் மனைவியை வணங்கியதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பரப்பப்பட்டு வருகிறது. அந்த செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

MODI 2.png

Facebook Link I Archived Link

இரண்டு படங்களை இணைத்து இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். முதல் படத்தில், “பிரதமரை அவமதிப்பது ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதிப்பது போலாகும்! – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு” என்று நியூஸ் 7 வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்துள்ளனர். 

இரண்டாவது படத்தில், பெண்மணி ஒருவரை பிரதமர் மோடி வணங்கும் படத்தை வைத்துள்ளனர். அந்த படத்தில், ஹெலிகாப்டரின் அருகில் பிரதமர் மோடி ஒரு பெண்மணியை வணங்கியபடி நிற்கிறார். அவருக்கு மாநகர மேயர் போன்று மேல் அங்கி அணிந்த பெண் ஒருவர் வணக்கம் செலுத்துகிறார்.

படத்துக்குக் கீழே, “அதானி மனைவி முன் பிரதமர் தலைகுனிவது தேசமே தலைகுனிவது போல் இல்லையா ஜீ?” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம், பிரபல தொழிலதிபர் அதானியின் மனைவிக்கு பிரதமர் மோடி தலை மற்றும் மேல் உடலைத் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தை, We Troll Allகலாய்.com என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 12ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அதானி மனைவியின் முன்பு தலை வணங்கிய மோடி என்று பல ஆண்டுகளாக இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இருப்பவர் உண்மையில் அதானியின் மனைவியா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

படத்தில் இருந்தவர் மேயர்கள் அணியும் மேல் அங்கியை அணிந்திருந்தார். வழக்கமாக குடியரசு தலைவர், பிரதமர் போன்ற நாட்டின் முக்கிய தலைவர்கள் ஒரு நகருக்கு வரும்போது, நகரின் மேயர் வரவேற்பது வழக்கம். அந்த வகையில், மேயர் ஒருவர் வரவேற்ற படமாக இருக்கலாம் என்று தோன்றியது.

மோடியை வரவேற்றது மேயரா அல்லது அதானியின் மனைவியா என்பதை கண்டறிய, முதலில் அதானியின் மனைவியின் படத்தைத் தேடினோம். அப்போது, கவுதம் அதானி, தனது மனைவியுடன் இருக்கும் பல படங்கள் நமக்குக் கிடைத்தன. மோடி படத்தில் இருந்தவருக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்தது.

MODI 3.png

மேற்கண்ட ஃபேஸ்புக் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, இந்த தகவல் பொய்யானது என்று பல உண்மை கண்டறியும் ஆய்வு கட்டுரைகள் வெளியாகி இருந்தது தெரிந்தது.

MODI 4.png

2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் தும்கூருக்கு வருகை புரிந்துள்ளார். அப்போது தும்கூர் நகர மேயராக இருந்த கீதா என்பவர் மோடியை வரவேற்றுள்ளார். பெண் மேயர் என்பதால் அவரை கவுரவிக்கும் வகையில் மோடி வணக்கம் செலுத்திய தகவல் நமக்குக் கிடைத்தது.

செய்தி 1

செய்தி 2

இது தொடர்பாக மோடி 2014ம் ஆண்டு தும்கூர் வந்தபோது வெளியான செய்தி, ட்வீட் பதிவுகள் நமக்குக் கிடைத்தன. 2014ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பிரதமர் மோடி தும்கூர் வந்தது தொடர்பாக அவருடைய இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதே நாளில், ட்விட்டரில் Rahul Kaushik என்பவர் மோடியைப் புகழ்ந்து ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தன்னை வரவேற்க வந்த தும்கூர் மேயர் கீதா ருத்ரேஷை பிரதமர் வணங்கிய காட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Archived Link

மேலும் Karnataka.com என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த படத்தை செப்டம்பர் 25ம் தேதி வெளியிட்டிருந்ததும் நமக்கு கிடைத்தது. அதில், “தும்கூர் வந்த பிரதமர் மோடி, தும்கூர் மாநகராட்சி மேயர் கீதா ருத்ரேஷை வணங்கிய காட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Archived Link

தொடர்ந்து தேடியபோது, 2014ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த உணவு பூங்கா திறப்பு விழா செய்தி, படங்கள் நமக்குக் கிடைத்தன. கன்னடத்தில் வெளியான செய்தியில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இருந்த படமும் இருந்தது. அந்த படத்தின் கீழ் என்ன எழுதப்பட்டுள்ளது என்று கன்னடம் தெரிந்தவர்களிடம் கொடுத்து மொழி மாற்றம் செய்துதர கேட்டோம். அதற்கு அவர், “தும்கூர் மேயருக்கு பிரதமர் மோடி வணக்கம் செலுத்தினார்” என்று எழுதப்பட்டுள்ளது என்றனர்.

Archived Link

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படத்தில் பிரதமர் மோடி வணங்கும் பெண்மணி, பிரபல தொழில் அதிபர் அதானியின் மனைவி இல்லை, அவர் தும்கூர் மாநகராட்சி மேயராக இருந்த கீதா ருத்ரேஷ் என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“அதானி மனைவியை வணங்கிய மோடி!” – ஃபேஸ்புக் படம் சொல்லும் கதை உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •